’யாரைப் பார்த்தாலும் எனது மகனாக...’ - மாயமான மகனைத் தேடி 21 முறை புதுச்சேரி வந்த 70 வயது தூத்துக்குடி மூதாட்டி  

’யாரைப் பார்த்தாலும் எனது மகனாக...’ - மாயமான மகனைத் தேடி 21 முறை புதுச்சேரி வந்த 70 வயது தூத்துக்குடி மூதாட்டி  
Updated on
1 min read

புதுச்சேரி: மாயமான மகனைத் தேடி தூத்துக்குடியில் இருந்து 21 முறை புதுச்சேரி வந்த 70 வயது மூதாட்டி, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், அண்ணா நகரை சேர்ந்தவர் குருசாமி மனைவி பேச்சியம்மாள் (70). இவர்களின் மகன் ரவி (38). இவர் சென்னைக்கு வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி பேருந்து நிலையம் வந்த ரவி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பேச்சியம்மாளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பேச்சியம்மாள் புதுச்சேரிக்கு வந்து விசாரித்தார். ஆனால் எந்த மருத்துவமனையிலும் ரவி இல்லை. போலீஸில் புகார் அளித்தும் ரவியை கண்டறிய முடியவில்லை.

இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுச்சேரிக்கு 21 முறை பேச்சியம்மாள் வந்துள்ளார். காவல் நிலையம், மருத்துவமனை, நகரப்பகுதி முழுவதும் மகனை தேடுவதும் பின்னர் தன் ஊருக்கு செல்வதுமாக இருந்து வருகிறார். இந்நிலையில், முதல்வர் ரங்கசாமியிடம் பேச்சியம்மாள் மனு அளிக்க இன்று (பிப். 5) சட்டப்பேரவைக்கு வந்தார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘எனது மகனை கண்டுபிடிக்க வேண்டும் என 21 முறை புதுச்சேரிக்கு வந்துள்ளேன். இதுவரை ரூ.60,000 வரை செலவு செய்துள்ளேன். யாரை பார்த்தாலும் எனது மகனா என உற்று நோக்குவேன். என் மகன் எங்கே உள்ளான் என்றே தெரியவில்லை’’ என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

அவர் தனது மகனின் போட்டோ, கடைசியாக அவரை தொடர்புகொண்ட தொலைபேசி எண்கள் ஆகியவற்றுடன் வந்திருந்தார். இதனிடையே பிற்பகலில் முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் பேச்சியம்மாள் சந்தித்து மனு அளித்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர், மூதாட்டியின் மகனை கண்டுபிடித்து ஒப்படைக்க உருளையன்பேட்டை காவல் நிலையத்தக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகனை தேடி புதுச்சேரிக்கு வந்துசெல்லும் தாயின் இத்தகைய நிலை சோகத்தை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in