

புதுச்சேரி: செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மைய மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மையம் இயங்கி வருகிறது. இங்கு எம்ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், எம் காம், எம்எஸ்சி கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாரவியல், விலங்கியல் உள்ளிட்ட 16 துறைகள் உள்ளன. சுமார் 1,600 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு பெரும்பாலான நாட்கள் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்று வந்தன. குறைந்த நாட்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடைபெற்றன.
இதற்கிடையில், கடந்த மாதம்19-ம் தேதி மூடப்பட்ட கல்லூரிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் பட்டமேற்படிப்பு மையத்தில் வரும் 8-ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு தொடங்கப்படவுள்ளது என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளே பெரும்பாலான நாட்கள் நடைபெற்ற நிலையில், ஆஃப்லைனில் தேர்வு அறிவித்ததை கண்டித்தும், ஆன்லைனில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து பட்டமேற்படிப்பு மைய வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தகவல் அறிந்த புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உடனே பட்டமேற்படிப்பு மைய இயக்குநர் செல்வராஜை தொடர்பு கொண்டு ஆஃப்லைன் தேர்வை ரத்து செய்துவிட்டு, ஆன்லைனில் தேர்வு நடத்துமாறு உத்தரவிட்டார். அதன்பேரில், மாணவர்கள் மத்தியில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என்று இயக்குநர் அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், "வரும் 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஆன்லைன் தேர்வு நடைபெறும். கூகுள் மீட் பாதுகாப்புடன் தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் குழுவாக அமர்ந்து தேர்வு எழுதுவதை தடுப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காக 20 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். யாராவது தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என செல்வராஜ் தெரிவித்தார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.