Published : 28 Apr 2016 08:16 AM
Last Updated : 28 Apr 2016 08:16 AM

அப்பல்லாம் இப்படித்தான்! - முதல் தேர்தலில் மொத்த செலவே ஐம்பதாயிரம் ரூபாய்தான்: சொல்கிறார் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன்

1991-96 அதிமுக ஆட்சியில் செய்தி விளம்பரத் துறை அமைச்சராக இருந்தவர் மு.தென்னவன். கவிப் பேச்சாளரான இவர் இப்போது, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்.

1989-ல் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என அதிமுக இரண்டுபட்டபோது ஜெயலலிதா பக்கம் நின்றவர். அப்போது நடந்த தேர்தலில் திருவாடானை தொகுதியில் நான்காம் இடத்துக்குப் போனாலும் அடுத்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்று செய்தி விளம்பரத் துறைக்கு அமைச்சராகவும் ஆனார்.

இருபது ஆண்டுகளுக்கு முந்தைய தேர்தல் அனுபவங்கள், இப்போதுள்ள தேர்தல் களேபரங்கள்.. என்றதுமே, ‘என்னத்தைச் சொல்ல.. என்று விரக்தியை தெளித்தபடி பேச ஆரம்பித்தார்.

‘’அன்றைக்கு இவ்வளவு கட்சிகள் இல்லை. இன்றைக்கு, கடை விரிக்கத் தெரிந்தவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறார்கள். நான் முதன்முதலில் தேர்தலில் நின்றபோது ஐம்பதாயிரம் ரூபாய் அளவுக்குத்தான் செலவு செய்திருப்பேன். அந்தக் காலத்தில் தேர்தலுக்காக ஒரு ரூபாய் செலவு செய்த இடத்தில் இன்றைக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கிறது.

அன்றைக்கு, நல்லவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து அவரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கட்சியிலிருந்தும் செலவுக்குக் காசு கொடுத்தார்கள். ஆனால், இன்றைக்கு, பல கட்சிகளில் முன்பணம் வாங்கிக்கொண்டுதான் சீட்டே கொடுக்கிறார்கள். நேர்காணலில் கேட்கும் முதல் கேள்வியே ’சீட்டுக் குடுத்தா எவ்வளவு செலவழிப்பே?’ என்பதாகத்தான் இருக்கிறது.

நாங்கள் எல்லாம் கட்சிக் கொடி கட்டி கட்சியை வளர்த்திருக்கிறோம். இப்போது எங்காவது கட்சிக்காரன் கொடி கட்டுகிறானா? இல்லையே.. எல்லா கட்சிகளுக்கும் கொள்கையோ லட்சியமோ தெரியாத ஒரே காண்ட்ராக்ட்டர் கொடி கட்டுவதால் தான் பல நேரங்களில் கட்சிக் கொடிகள் தலைகீழாகவும் பறக் கின்றன.

சில கட்சிகள்கூட கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல செயல்படத் தொடங்கிவிட்டதால் கையெடுத்து கும்பிடத் தெரிந்தவர்கள் எல்லாம் அடுத்த முதல்வர் நான்தான் என்று மனப்பால் குடிக்கிறார்கள்; மார்தட்டுகிறார்கள். நாங்கள் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தபோது களம் இப்படி எல்லாம் இல்லை என்பதைத் தவிர வேறெந்த ஒப்பீடையும் என்னால் சொல்ல முடியவில்லை. அரசியல்வாதிகள் அப்படியே இருந்தாலும் காலத்துக்கேற்ப அரசியல் அவர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறது. அந்த மாற்றம் தங்களுக்கானதாக இருக்கக் கூடாதா என வாக்காளர்களும் ஏங்கிக் கொண்டே இருக்கிறார்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x