மீன்பிடி வலையில் சிக்கி போராடிய அரிய வகை ஆலிவ் ரிட்லி ஆமையை மீட்டு கடலில் விட்ட வனத்துறை ஊழியர்கள்

மீன்பிடி வலையில் சிக்கி போராடிய அரிய வகை ஆலிவ் ரிட்லி ஆமையை மீட்டு கடலில் விட்ட வனத்துறை ஊழியர்கள்
Updated on
1 min read

புதுச்சேரி: இந்தியாவில் காணப்படும் கடல் ஆமை இனங்களில் அபூர்வமானது ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள். இத்தகைய ஆலிவ் ரிட்லி ஆமைகள் புதுச்சேரி, கடலூர், மரக்காணம் உள்ளிட்ட கடலோரப் பகுதிக்கு ஆண்டுதோறும் நவம்பர் முதல் மே மாதம் வரையிலான காலங்களில் முட்டையிட வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

குறிப்பாக, மணற்பரப்பு அதிகமுள்ள புதுச்சேரி பகுதிகளான கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் புதுக்குப்பம் வரை கடலோரப் பகுதிகளில் இந்த ஆமைகள் அதிகளவு முட்டையிட்டு செல்வது வழக்கம். இந்த ஆலிவ் ரிட்லி அமைகள் அழிந்து வரும் நிலையில், அவற்றை பாதுகாக்க வனத்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஆண்டுதோறும் முட்டைகளை புதுச்சேரி வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் துறையினர், உள்ளூர் இளைஞர்களின் துணையுடன் சேகரித்து பாதுகாத்து, பின்னர் குஞ்சு பொரித்ததும் பத்திரமாக கடலில் விடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில் இந்த அபூர்வ வகை ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது தொடர் கதையாகி உள்ளது. இனப்பெருக்கத்திற்காக தமிழக, புதுச்சேரி கடலோர பகுதிக்கு வரும் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன.

குறிப்பாக மீன்படி படகு எஞ்சின்கள், கைவிடப்பட்ட வலைகளில் சிக்கி இறந்துவிடுகின்றன. கடந்த நவம்பவர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 40 ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இந்நிலையில், இன்று (பிப். 3) கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு கடலோர பகுதியில் பழை மீன்பிடி வலையில் சுமார் 80 கிலோ எடை கொண்ட அரியவகை ஆலிவ் ரிட்லி ஆமை ஒன்று சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் அந்த ஆமையை வலையில் இருந்து விடுவித்து, அதனை உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். இது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய செய்தது.

‘‘மனிதர்கள் அன்றாட தேவைக்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், கைவிடப்பட்ட வலைகள் கடலில் கொட்டுவதுதன் மூலம் கடல்வாழ் உயிரினங்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகின்றன. இதுபோன்ற அரியவகை ஆமை இனங்களும் அழிவின் விலிம்புக்கு செல்கின்றன. ஆகவே தேவையற்ற பிளாஸ்டிக் குப்பைகளை, கைவிடப்பட்ட மீன் வலைகளை கடலில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் இதுபோன்ற அரியவகை ஆமை இனங்களை பாதுகாக்க முடியும்’’ என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in