

சென்னை: காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி சென்னையில் வரும் பிப். 17-ம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளர்கள் ஒன்றமைப்பின் மாநிலத் தலைவர் சீ.ரகு, பொதுச் செயலர் முரளிதரன், பொருளாளர் மு.செந்தில்குமரன் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், போக்குவரத்து ஆணையர் ஆகியோரிடம் போராட்ட அறிவிப்பு தொடர்பான கடிதம் வழங்கினர்.
இதுகுறித்து அமைப்பின் மாநில முன்னாள் தலைவர் கு.பால்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘போக்குவரத்துத் துறை அரசாணைப்படி பணியிட மாறுதல் வழங்க வேண்டும். பணியிட மாறுதல்களில் முறைகேடுகளைத் தவிரக்க வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி வரும் பிப். 17-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
காலி பணியிடங்கள் அதிகரிப்பதால், ஊழியர்களுக்கு பணிப் பளு கூடுவதுடன், மக்களுக்கு சேவை வழங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது. எங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், ஆலோசனை நடத்தி, அடுத்தகட்ட போராட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிடுவோம்’’ என்றார்.