

செங்கல்பட்டு: தமிழக அரசின் சுகாதாரத் துறை மூலம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் மாத்திரை, மருந்துகள் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மாத்திரைகள் செங்கல்பட்டு, வேதாச்சலம் நகர், பெருமாள் கோயில் அருகே குப்பையில் கிடந்தன. 100 மாத்திரைகள் அடங்கிய 30 பெட்டிகள் குப்பையில் வீசப்பட்டு கிடந்தன.இந்த மாத்திரைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டபோது, “இவை உடல் ஊட்டச்சத்துக்கும், காய்ச்சலுக்கும் உட்கொள்ளும் மாத்திரைகள் ஆகும். வளர் இளம் பெண்களுக்கு இரும்புச் சத்து குறைபாட்டை சரி செய்யவும் இந்த மாத்திரைகள் வழங்கப்படும்” என்றனர்.
செங்கல்பட்டு தலைமை மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்தவையா? அல்லது வெளியூரில் இருந்து கொண்டு வந்து இங்கு கொட்டப்பட்டவையா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.