Published : 05 Apr 2016 04:01 PM
Last Updated : 05 Apr 2016 04:01 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதுமுகங்களுக்கு அதிமுகவில் வாய்ப்பு: முக்கூரும் அக்ரியும் ஏமாற்றம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட புதுமுகங்களுக்கு அதிமுக வாய்ப்பு கொடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள், இன்னாள் சட்டபேரவை உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளராக பெருமாள் நகர் கே.ராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு 54 வயதாகிறது. பிஏ பட்டதாரி. விஜயலட்சுமி என்ற மனைவியும், கல்பனா, கலையரசி ஆகிய 2 மகள்களும், கார்த்தி என்ற மகனும் உள்ளனர். மாணவர் பருவமாக இருந்தபோது, 1977-ல் நடைபெற்ற தேர்தலில் பணியாற்றி உள்ளார். 01-01-2009 முதல் 25-02-2012 வரை எம்ஜிஆர் மன்றத் தலைவராகவும், 23-05-2012 முதல் 07-10-2015 வரை ஜெயலலிதா பேரவைச் செயலாளராகவும், 07-10-2015 முதல் மாவட்ட (தெற்கு) செயலாளராக உள்ளார். 2 கல்வியியல் கல்லூரிகள், ஒர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் மற்றும் மின்னணு சாதன விற்பனை ஆகிய தொழில்களை செய்து வருகிறார். தி.மலை பெருமாள் நகரில் வசித்து வருகிறார்.

கீழ்பென்னாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளராக வேட்டவலம் பேரூராட்சி செயலாளர் க.செல்வமணி அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 53. மஞ்சுளா என்ற மனைவியும், பிரியா, சோபியா ஆகிய 2 மகள்களும், கோபி என்ற மகனும் உள்ளனர். முழு நேர அரசியல் பணி. வேட்டவலம் பேரூராட்சி செயலாளராக 15 ஆண்டுகளும், பேரூராட்சி மன்ற உறுப்பினராக 10 ஆண்டுகளும் பதவி வகித்துள்ளார். மேலும், வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக உள்ளார். வேட்டவலம் சத்தியமூர்த்தி வீதியில் வசித்து வருகிறார்.

போளூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக போளூர் தொகுதிச் செயலாளர் சி.எம்.முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 43. எம்.ஏ., எம்.பில் பட்டதாரி. சசிகலா என்ற மனைவியும், அருண் என்ற மகனும், இந்துமதி, சந்தியா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

விவசாயம், தங்கும் விடுதி, எடைமேடை மற்றும் வாட்ர் சர்வீஸ் தொழில் செய்து வருகிறார். சேத்துப்பட்டு பழம்பேட்டை மேட்டுத் தெருவில் வசித்து வருகிறார்.

செங்கம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் மு.தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 51.

செங்கம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். மனைவி சுமதி, செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். சபரீசன் என்ற மகனும், ஜெயலலிதா என்ற மகளும் உள்ளனர். மாவட்ட (தெற்கு) அமைப்பு சாரா ஓட்டுநர் அணி பொருளாளராக பதவி வகிக்கிறார்.

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக வி.பன்னீர் செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 43. மனைவி ராஜேஸ்வரி, மாவட்ட காவல் அலுவலகத்தில் கணினி விவரப் பதிவுத் துறையில் பணியாற்று கிறார். கிளைச் செயலாளர், ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பதவி வகித்துள்ளார்.

மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக உள்ளார். விவசாயம், ஜின்னிங் மில் தொழில் செய்து வருகிறார். போளூர் வசந்தம் நகர் பெரியார் தெருவில் வசித்து வருகிறார்.

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக தூசி.கே.மோகன் அறிவிக்கப்பட்டுள் ளார். அவருக்கு வயது 53. பிபிஏ பட்டதாரி. 1979-ல் இருந்து அதிமுக உறுப்பினராக உள்ளார்.

கிளைச் செயலாளர், இளைஞரணி துணைச் செயலாளர், ஊராட்சி மன்றத் தலைவர், பொதுக்குழு உறுப்பினர், தொகுதிச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளராக பதவி வகித்துள்ளார். வெம்பாக்கம் ஒன்றியச் செயலாளர் மற்றும் வெம்பாக்கம் ஒன்றியக் குழு துணைத் தலைவராக உள்ளார். பார்வதி என்ற மனைவியும், லட்சுமி, இறையரசி, இந்துமதி, வினு ஆகிய 4 மகள்களும் உள்ளனர். காஞ்சிபுரம் பட்டு சேலை உற்பத்தியாளர். தூசி கிராமம் போலீஸ் லைன் தெருவில் வசித்து வருகிறார்.

வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக வி.மேகநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 54. பி.ஏ. பட்டதாரி. அம்பிகா என்ற மனைவியும், சக்தி, ஈஸ்வரி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். 25 ஆண்டுகளாக 18-வது வட்டச் செயலாளர் மற்றும் நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளராக உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு 5 முறை மனு கொடுத்துள்ளார். இப்போதுதான் வாய்ப்பு கிடைத்துள்ளது. வந்தவாசி அன்னை சத்யா மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தில் கணக்காளராகப் பணியாற்றுகிறார். வந்தவாசி பெரிய காலனியில் வசித்து வருகிறார்.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 56. மணிமேகலை என்ற மனைவியும், சந்தோஷ்குமார், விஜயகுமார் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

1989-ம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக உள்ளார். மாவட்டப் பிரதிநிதி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி செயலாளர், சேவூர் ஊராட்சி மன்றத் தலைவர், ஆரணி ஒன்றிய குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

2000-ம் ஆண்டு முதல் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளராக உள்ளார். விவசாயம் மற்றும் முழு நேர அரசியல்வாதியாக உள்ளார். சேவூர் கிராமம் அம்மன் கோயில் தெருவில் வசித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x