

சென்னை: செல்லப்பிராணிகள் மற்றும் தெரு நாய்கள் வளர்ப்பை முறைப்படுத்துவதற்கான விதிகளை வகுப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்று, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்திய மக்கள் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த 6 மாதங்களில் ஐஐடியில் 49 நாய்கள் இறந்துள்ளன. கூட்டுக்குழு ஆய்வறிக்கையில் ஐஐடி வளாகத்தில் 14 நோய்வாய்ப்பட்ட நாய்கள் இருப்பதாகவும், அவற்றை கால்நடை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்களை முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் ஐஐடி வளாகத்திலிருந்து 22 நாய்கள் மீட்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைகள் எடுக்கபட்ட பிறகு, தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஐஐடி தரப்பில் தங்கள் வளாகத்தில் உள்ள நாய்கள் முறையாக பராமரிக்கப்படுவதாகவும், பிற விலங்குகளை தாக்குவதால் தான் அவற்றை அடைத்து வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் கேட்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், செல்லப் பிராணிகள் மற்றும் தெரு நாய்கள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக விதிகள் வகுக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும்.மேலும், பிற நாடுகளில் பிராணிகள் வளர்ப்பு எப்படி முறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து, அதுதொடர்பான விதிகளை வகுப்பதற்கான ஆலோசனைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி மனுதாரர் அமைப்பிற்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 9-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.