Last Updated : 21 Jan, 2022 12:56 PM

 

Published : 21 Jan 2022 12:56 PM
Last Updated : 21 Jan 2022 12:56 PM

புதுவை கிருமாம்பாக்கம் ஏரியில் தூக்கி எறியப்படும் காலி மதுபாட்டில், பிளாஸ்டிக் பொருட்கள்: ஏரி மாசடையும் அபாயம்

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கிருமாம்பாக்கம் ஏரியில் தூக்கி எறியப்படும் காலி மதுபாட்டில், பிளாஸ்டிக் பொருட்களால் மாசடைந்த ஏரியின் தோற்றம்.

புதுச்சேரி: கிருமாம்பாக்கம் ஏரியினுள் தூக்கி எறியப்படும் காலி மதுபாட்டில், பிளாஸ்டிக் பொருட்களால் ஏரி மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

புதுச்சேரியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கிருமாம்பாக்கம் கிராமம். இங்கு பெரிய ஏரி, சின்ன ஏரி என இரண்டு ஏரிகள் அருகருகே அமைந்துள்ளன. இதில் சின்ன ஏரியைச் சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஏரி புனரமைக்கப்பட்டு, புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில், மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின் கீழ், ரூ.5 கோடியே 26 லட்சம் செலவில், நவீன சுற்றுலாத் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இங்கு கிருமாம்பாக்கம் ஏரியினுள் தூக்கி எறியப்படும் காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏரியின் தண்ணீர், அதன் இயற்கை சூழல் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ரெஸ்டாரன்ட், நவீன படகு தளம், பார்க்கிங், கரைகள் அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள ஏரியின் கரைகள் 'பேவர் பிளாக்' கல்லில் சாலை அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. ஏரியின் அழகைக் கண்டு ரசிக்க ஏதுவாக ஆங்காங்கே 'பேர்ட்ஸ் வாட்ஜ் டவர்கள்' அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கிருமாம்பாக்கம் ஏரியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள வாட்ஜ் டவர்கள் மற்றும் அங்குள்ள பேவர் பிளாக் சாலையில் தினமும் மதுப்பிரியர்கள் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.

பகல், இரவு என எந்நேரமும் மதுப்பிரியர்கள் ஏரியை ஆக்கிரமித்து மது குடித்து வருவதால் ஏரிக்கரை திறந்தவெளி பாராகவே மாறியுள்ளது. அவ்வாறு மது அருந்துவோர் போதை அதிகரித்ததும் வாட்ஜ் டவர் கூரையை உடைப்பது, காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பை, டம்ளர் உள்ளிட்ட பொருட்களை ஏரிக்குள் வீசுவது போன்ற அராஜகச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு வீசப்படும் மதுபாட்டில்கள் ஏரித் தண்ணீரில் மிதந்தும், பிளாஸ்டிக் பொருட்கள் ஏரிக்குள்ளும், கரையிலும் அடர்ந்து கிடக்கின்றன.

இதனால் ஏரியின் தண்ணீர் மாசடைவதுடன், ஏரியின் இயற்கை சூழலும் பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறும்போது, ''சமீபத்தில் பெய்த மழையினால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, இயற்கையோடு அழகிய தோற்றத்தில் காட்சியளிக்கிறது. பல கோடி ரூபாய் செலவு செய்து சுற்றுலா திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், மதுப்பிரியர்கள், தினமும் மது குடித்துவிட்டு மதுபாட்டில்களை ஏரியில் வீசுவதும், பிளாஸ்டிக் பொருட்களைக் கண்டமேனிக்கு வீசிவிட்டுச் செல்வதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இதனால் ஏரியின் தண்ணீர் மற்றும் அதன் இயற்கை அழகும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த வேதனையைத் தருகிறது. தினமும் மதுப்பிரியர்கள், மது குடிப்பதால் ஏரிப்பகுதிக்குப் பொதுமக்கள் வரவும் அச்சப்படுகின்றனர். எனவே, கிருமாம்பாக்கம் ஏரியில் மது குடிப்பதைத் தடுக்கவும், ஏரி மாசடையாமல் பாதுகாக்கவும் புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x