

தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் குடிநீர் தேவை அதி கரித்துள்ளது, இதனால், தினமும் 1 லட்சத்து 70 ஆயிரம் அம்மா குடிநீர் பாட்டில்கள் உற்பத்தி செய்ய போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அரசு போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ‘அம்மா குடிநீர்’ உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் பாட்டில்கள், தமிழகம் முழுவதும் முக்கியமான பஸ் நிலையங்களில் ஒரு லிட்டர் ரூ.10 என்ற விலையில் விற்கப்படுகின்றன. சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தியாகராயர் நகர், கோயம் பேடு, அடையார், எழும்பூர், பெசன்ட்நகர், மயிலாப்பூர், வzடபழனி, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, கேளம்பாக்கம் உட்பட மொத்தம் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பூத்கள் அமைக்கப்பட்டு, ‘அம்மா குடிநீர்’ பாட்டில்கள் விற்கப் படுகின்றன.
குளிர் காலங்களில் குடிநீர் தேவை குறைவாக இருந்தது. அப்போது, தேவைக்கு ஏற்றவாறு குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டது. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது, தமிழக அரசு சார்பில் மக்களுக்கு இலவசமாக ‘அம்மா குடிநீர்’ விநியோகம் செய்யப்பட்டது. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி யுள்ள நிலையில், குடிநீர் பாட்டில்கள் தேவை அதிகரித் துள்ளது. தற்போது தினமும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அடுத்த வாரம் முதல் முழு அளவு உற்பத்தியான ஒரு லட்சத்து 70 ஆயிரம் பாட்டில்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.