Published : 12 Jun 2014 12:00 AM
Last Updated : 12 Jun 2014 12:00 AM

இருட்டுதானே எனக்குத் தெரிந்த ஒரே கலர்- சாதித்துக் காட்டிய கிடியோன் கார்த்திக்

“ஒரு மனிதனுக்கு திறமை இருந்தும் நிராகரிக்கப்படும்போது உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்படுகிறான். என்னை விமர்சித்தவர்கள் உதிர்த்த கடுமை யான வார்த்தைகள் என்னை காயப்படுத்தின. அப்படி அவர்கள் என்னை காயப்படுத்தாமல் இருந் திருந்தால் நான் சோம்பேறியாகி இருப்பேன்’’- நம்பிக்கை துளிர்க்க பேசினார் கிடியோன் கார்த்திக்.

மா, கருடப்பார்வை திரைப் படங்களுக்கு இசை அமைத்த கிடியோன் கார்த்திக் மதுரைக்காரர். 3 வயதில் தந்தையை இழந்து, 5 வயதில் பார்வையை பறிகொடுத்து கிடியோன் கார்த்திக் கடந்து வந்த பாதை கடினமானது. அதையெல்லாம் கடந்து சாதித்துக் காட்டியிருக்கும் இவர், விரைவில் படம் ஒன்றை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்தப் பணிகளுக்கு நடுவில் நம்மிடம் பேசினார்.

“அப்பா சுங்கத்துறை அதிகாரியா இருந்தார். அக்கா பிறந்த நாள் அன்று, ‘லீவு போட்டுவிட்டு வரு கிறேன்’ என்று சொல்லிப் போனவர் பிணமாகத்தான் திரும்பி வந்தார். சென்னை துறைமுகத்தில் கடத்தல் காரர்களை பிடிக்கப்போன இடத் தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அப் போது எனக்கு 3 வயது; அக்காவுக்கு 7 வயது. வெளி உலகமே தெரியாத அம்மாவால் சென்னையில் எங்களை வைத்துக் கொண்டு காலம் தள்ள முடியவில்லை. அதனால், மதுரைக்கே திரும்பிவிட்டோம்.

5 வயதில் எனக்கு இடது கண்ணில் நீர் கோத்திருப்பதாகச் சொல்லி அறுவை சிகிச்சை செய் தார்கள். தவறான சிகிச்சையால் பார்வை பறிபோனது. ‘கன்னத்திலோ தலையிலோ அடித்தால் வலது கண்ணிலும் பார்வை பறிபோகலாம்’ என டாக்டர்கள் பயமுறுத்தி அனுப் பினார்கள். 9 வயதில் அதுவும் நடந்தது. டீச்சர் என் தலையில் அடித்ததால் அடுத்த ஒரு மணி நேரத்தில் வலது கண்ணும் இருண்டு போனது.

அப்பாவின் மொத்த பணமும் சிகிச்சைக்கே செலவாகிப்போன தால் கறவை மாடு வாங்கி பால் கறந்து விற்று நாங்கள் சாப்பிட வேண்டிய நிலை. இரண்டாண்டுகள் இடை வெளிக்குப் பிறகு சென்னையில், பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அங்குதான் எனது இசை பயணமும் தொடங்கியது.

என்னுடைய ஆர்வத்தை புரிந்து கொண்ட ரெவரெண்ட் ஜான் சேவியர், எனக்கு இசையைக் கற்றுக் கொடுத்தார். தனது சினிமா நண்பர் களை எல்லாம் எனக்கு அறிமுகப் படுத்தினார். அப்போது நான் ஒன்பதாம் வகுப்புதான் படித்தேன். 2002-ல் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு சினிமா வாய்ப்புகளை தேட ஆரம்பித்தேன். எனது இசையை ரசித்து எனக்கு வாய்ப்புகொடுக்க முன்வந்த பலர் என்னை நேரில் பார்த்ததும் பின்வாங்கினார்கள். பாட்டுக்கு இசை அமைக்கலாம். ஆனால், பார்வையில்லாமல் ரீரெக் கார்டிங் எப்படிச் செய்யமுடியும் என்பது அவர்களின் நியாயமான சந்தேகம்.

அதையும் தாண்டி, திரைப்படக் கல்லூரி பேராசிரியர் மதன் கேபிரியல் முழுக்க முழுக்க மாற்றுத் திறனாளிகளை வைத்து ‘மா’ படத்தை தயாரித்தார். அதற்கு இசை அமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அடுத்து, இயக்குநர் விவேகானந்தன் கருடப்பார்வை படத்தில் வாய்ப்பு கொடுத்தார். இரு படங்களுக்கு இசை அமைத்த பிறகுதான் சினிமா உலகம் எனது திறமையை மதித்தது. அடுத்த கட்டமா ஒரு படத்தை இயக்க வேண்டும் என முடிவெடுத்தேன். அதற்கு முன்னதாக, ‘அம்மு’ என்ற குறும்படம் ஒன்றை எடுத்துக்காட்டி அதிலும் எனது திறமையை நிரூபித்தேன்.

‘படம் எடுக்கலாம்னு நீ பகல் கனவு காணாதே’ என்று எனது நண்பர் ஒருவர் சொன்னார். ‘நான் கனவில்தானே பகலையே காண்கிறேன்’ என்பது அவருக்குப் புரியவில்லை. இருட்டுதானே எனக்குத் தெரிந்த ஒரே கலர். எனவே, அதையே கமர்சியலாக்க முடிவெடுத்துவிட்டேன். ஒரு ஊரில் கரண்ட் கட்டான சமயத்தில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் விரைவில் நான் இயக்கப்போகும் காமெடி படத்தின் கதை’’ - முகம் மலரச் சொன்னார் கிடியோன்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x