

புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பிறகு கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 1,107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி தலைமை செயலருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று (ஜன. 13) வெளியிட்டுள்ள தகவலில், ''புதுச்சேரி மாநிலத்தில் 4,187 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 956, காரைக்கால்- 126, ஏனாம்- 7, மாஹே- 18 என மொத்தம் 1,107 (26.44 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,883 ஆகவும், இறப்பு விகிதம் 1.41 சதவீதமாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 866 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதுச்சேரியை பொருத்தவரையில் ஜிப்மரில் 98 பேரும், அரசு மார்பு நோய் மருத்துவமனையில் 37 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல் காரைக்காலில் 15 பேரும், ஏனாமில் ஒருவரும், மாஹேவில் 16 பேரும் என மொத்தமாக மருத்துவமனைகளில் 167 பேரும், சிகிச்சையில் உள்ளனர். வீடுகளில் 4,103 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாநிலம் முழுவதும் மொத்தம் 4,270 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
புதிதாக 40 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 713 (95.40 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 20 லட்சத்து 83 ஆயிரத்து 360 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 17 லட்சத்து 68 ஆயிரத்து 424 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது.
மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என முதல் டோஸ் 9 லட்சத்து 3 ஆயிரத்து 845 பேருக்கும், 2-வது டோஸ் 5 லட்சத்து 86 ஆயிரத்து 589 பேருக்கும், பூஸ்டர் டோஸ் 1,364 பேருக்கும் என மொத்தம் 14 லட்சத்து 91 ஆயிரத்து 798 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.''
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தலைமை செயலருக்கு கரோனா:
புதுச்சேரி தலைமைச் செயலராக பதவி வகிப்பவர் அஸ்வனி குமார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நேற்று கரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவு இன்று காலை தெரியவந்தது. அதில், தலைமைச் செயலருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். அதேநேரத்தில் தலைமை செயலரின் உடல்நிலையை சுகாதாரக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ''தலைமைச் செயலருக்கு லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்'' என புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.