

தஞ்சாவூர்: கரோனா பரவல் காரணமாக திருவையாறில் தியாகராஜரின் 175-வதுஆண்டு ஆராதனை விழா, ஒருநாள் மட்டுமே நடைபெறும், விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தியாக பிரம்ம மகோத்சவ சபாவின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 175-ம் ஆண்டு ஆராதனைவிழாவை ஜன.18 முதல் 22-ம்தேதி வரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர்செய்து வந்தனர். இந்நிலையில், கரோனா பரவல் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, இவ்வாண்டு ஆராதனை விழாவை தியாகராஜ சுவாமிகள் முக்தியடைந்த பகுள பஞ்சமி தினமான ஜன.22-ம் தேதி ஒருநாள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜன.22-ம் தேதி காலை வழக்கம்போல உஞ்ச விருத்தியும், பின்னர் நாதஸ்வர கச்சேரியும் நடைபெறும். அதன்பின்னர், சத்குரு தியாகராஜ சுவாமிக்குஅபிஷேகம், ஆராதனை மற்றும்சமூக இடைவெளியுடன் குறைந்த அளவிலான இசைக்கலைஞர்களை கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனை இசைத்து இசை அஞ்சலி செலுத்தப்பட்டு, ஆராதனை விழா நிறைவு பெறும்.
மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி, விழா பந்தலுக்குள் 100 பேருக்கு மேல் அனுமதியில்லை என்பதால், விழாவின்போது பந்தலுக்குள் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. இந்த விழாவில்கலந்துகொள்ளும் அனைவரும்2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழைக் கொண்டுவர வேண்டும். இவ்வாறுஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.