Published : 27 Jun 2014 10:46 AM
Last Updated : 27 Jun 2014 10:46 AM

சக்கர நாற்காலியில் உட்கார்ந்ததால் சமூக சேவகனாக இருக்க முடிகிறது- விபத்தால் திசை மாறிய வெங்கடபூபதியின் வெற்றிப் பயணம்

‘‘ஓடிக்கொண்டே இருந்திருந்தால் என்னை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்திருப்பேன்” என்கிறார் வெங்கடபூபதி.

தேனியை அடுத்த வடபுதுப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடபூபதி. டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு ராணுவத்தில் சேர்ந்தார். தான் நினைத்ததற்கு மாறாக ராணுவ முகாம் இருந்தததால், ஏழே வருடத்தில் விருப்ப ஓய்வில் வெளியில் வந்து விட்டார். ராணுவத்தில் இருக்கும்போதே எம்.ஏ., சமூகவியல் முடித்திருந்த வெங்கடபூபதி, வெளியில் வந்ததும் சமூகத்தை பற்றி சிந்திக்கத் தொடங்கினார். ஆனால், இயற்கை அவரது வாழ்க்கையில் வேறுமாதிரி விளையாடிவிட்டது. ஆனாலும், தான் நினைத்ததை கொஞ்சம் கொஞ்சமாக சாதித்துக் கொண்டிருக்கிறார். அதுகுறித்து அவரே விளக்குகிறார்..

1993-ல் ராணுவத்தில் இருந்து வந்ததுமே இயற்கை விவசாயத்தை கையில் எடுத்தேன். எங்கள் கிராமத்தில் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ‘உழவர் மன்றம்’என்ற அமைப்பை உருவாக்கினேன். இயற்கை விவசாயம் செய்வதற்கு விவசாயிகளுக்கு வங்கிக் கடன்களை வாங்கிக் கொடுத்தேன்.

கிராமத்து மக்கள் ஆயுள் காப்பீடு குறித்து அவ்வளவாய் அக்கறை இல்லாமல் இருந்தார்கள். அதனால், நானே எல்ஐசி முகவராகி, பலரை ஆயுள் காப்பீடு செய்ய வைத்தேன். இறப்புக்குப் பிறகும் குடும்பத்தை வாழவைக்க முடியும் என அவர்களுக்கு புரியவைத்தேன்.

என் கிராமத்தை மாதிரி கிராமமாக மாற்ற வேண்டும் என்று எனக்குள் நிறைய கனவுகளை வைத்திருந்தேன். இடையில் ஏற்பட்ட ஒரு விபத்து, என்னை வேறு திசையில் பயணிக்க வைத்துவிட்டது. 2009-ல் சாலை விபத்தில் எனக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது. குணப்படுத்த முடியும், முடியாது என்று சொல்லாமலேயே 6 மாத காலம் சிகிச்சையளித்து 15 லட்சத்தை கரைத்துவிட்டனர். கடைசி யில், இடுப்புக்குக் கீழே செயலற்ற நிலையில் சக்கர நாற்காலியில் வீட்டுக்கு அனுப்பினர்.

வீடுவரை மனைவி என்று கண்ணதாசன் பாடினார். ஆனால், எனக்கு விபத்துவரைதான் மனைவி. இடுப்புக்குக் கீழே செயலிழந்துவிட்ட என்னோடு வாழ என் மனைவிக்கு இஷ்டமில்லை. விவாகரத்து வாங்கிக் கொண்டு போய்விட்டார். ‘மாற்றுத் திறனாளி ஒருவரால் சிறுவனுக்கு பாதுகாப்பான வாழ்க்கையைத் தரமுடியாது’என்று சொல்லி ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனது மகனையும் பிரித்துவிட்டார்கள். அந்த மன அழுத்தத்தில் தற்கொலை முடிவுக்கே போய்விட்டேன்.

அப்போதுதான் எனது குருநாதரான அமர்சேவா சங்கத்தின் ராமகிருஷ்ணன், ‘உன்னால் முடிக்கப்பட வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது’ என்று சொல்லி எனக்கு இன்னொரு வழியைக் காட்டினார்.

குருநாதர் பெயரிலேயே ராம்ஜி டிரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுத்தி, மாற்றுத் திறனாளிகளுக்கு மனதளவில் உள்ள பிரச்சினைகளை கண்டுபிடித்து கவுன்சலிங் கொடுத்தேன். அத்துடன் அவர்களுக்கு தன்னம்பிக்கை வருவதற்காக கம்ப்யூட்டர், தையல், செல்போன் சர்வீஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளை கொடுக்க ஆரம்பித்தேன்.

அருகிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரி உதவியுடன் இதுவரை 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி கொடுத்திருக்கிறோம். விவசாயத்தின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. அதை வைத்தும் நண்பர்கள் துணையோடும் எங்கள் சேவை தொடர்கிறது.

என்னை கவனிக்க எனது 77 வயது அம்மா இருக்கிறார். என்னைப் போல் தண்டுவடம் பாதித்த மாற்றுத் திறனாளிகள் பலர் கவனிக்க ஆளில்லாமல் இருக்கிறார்கள். முதல்கட்டமாக இந்த ஆண்டு அவர்களில் நான்கு பேரை எங்களது பொறுப்பில் தங்கவைத்து அவருக்கான உதவிகளை வழங்கப் போகிறோம்.

ஓடிக்கொண்டே இருந்திருந்தால் என்னை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்திருப்பேன். சக்கர நாற்காலியில் உட்கார்ந்ததால் ஒரு சமூக சேவகனாக இருக்க முடிகிறது. மரம் வைத்தவன் எனக்கும் தண்ணீர் ஊற்றுகிறான் என பூரிப்புடன் சொன்னார் வெங்கடபூபதி.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x