

கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் சார்ந்த கட்சி, தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி வருவதால், களத்தில் உள்ள வேட்பாளர்கள் கடும் வெயிலையும் பொருட் படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் சார்ந்த கட்சியே கடந்த 1971-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து வருகிறது. குறிப்பாக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகவைச் சேர்ந்த எஸ்.மணியப்பன் வெற்றி பெற்றார். அப்போது, திமுக ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து 1977, 1980, 1985 ஆகிய 3 தேர்தல்களிலும் அதிமுகவைச் சேர்ந்த கே.ஆர்.சின்னராசு வெற்றி பெற்றார். அப்போது தொடர்ந்து 3 முறையும் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியை கைப்பற்றியது.
1989-ல் நடந்த தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுகவைச் சேர்ந்த காஞ்சனா வெற்றி பெற்றார். அப்போது, திமுக ஆட்சி அமைந்தது. 1991-ல் அதிமுகவைச் சேர்ந்த கே.முனி வெங்கடப்பன், 2001-ல் கோவிந்த ராஜ், 2011-ல் கே.பி.முனுசாமி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 1991, 2001, 2011-ல் அதிமுக ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் 1996-ல் திமுகவைச் சேர்ந்த காஞ்சனாகமலநாதன், 2006-ல் டி.செங்குட்டுவன் வெற்றி பெற்றனர். 1996, 2006-ல் திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதி யில் அதிமுக, திமுக, பாமக, மநகூ, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
கிருஷ்ணகிரி சென்டிமெண்ட் காரணமாக எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கடும் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் வாக்கு சேகரித்து வருகின்றனர். அதிமுக வேட்பாளர் கோவிந்தராஜ், நட்சத்திர பேச்சாளர்களை களம் இறக்கி உள்ளார். திமுக வேட்பாளர் செங்குட்டுவனும் நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் ஆதரவு திரட்டி வருகிறார்.