

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிகளில் வருகின்ற 19-ம் தேதியில் இருந்து முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட உள்ளது எனவும், இதற்கான வினாத்தாள்களை புதுச்சேரி கல்வித்துறையே முதல் முதலாக தயாரித்து வழங்க உள்ளதாகவும் புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி திருவள்ளுவர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புக் கூட்டம் இன்று (ஜன. 8) நடைபெற்றது. பள்ளியின் துணை முதல்வர் கலாவதி வரவேற்றார். பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சிவகாமி முன்னிலை வகித்தார். புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பெற்றோர் - மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, கரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் பள்ளிகள் திறப்புக்குறித்து பெற்றோருடைய கருத்துக்களை கேட்டறிந்தார்.
இதில் பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறந்து வைக்க வலியுறுத்தினர். நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி தேர்வுத்துறை அதிகாரி பூபதி, பெற்றோரிடம் தேர்வு தொடர்பான கேள்விகளுக்கு விளக்கமளித்தார். பள்ளியின் கணித விரிவுரையாளர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், ‘‘புதுச்சேரியில் வரும் 19-ம் தேதியில் இருந்து முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரலில் இரண்டாவது திருப்புதல் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இப்படி தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஒரு முறை திருப்புதல் தேர்வு நடத்தி, மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான வினாத்தாள்களை முதல் முறையாக புதுச்சேரி கல்வித்துறையே தயாரித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க உள்ளது.
முன்பெல்லாம் தனியார் பள்ளிகளே வினாத்தாள்களை தயார் செய்து தேர்வு நடத்தி வந்தனர். ஆனால், இம்முறை அரசே வினாத்தாள்களை தயார் செய்து வழங்க உள்ளது. புதுச்சேரி கல்வித்துறை தமிழக கல்வி வாரியத்தின் ஒத்துழைப்போடு தான் செயல்பட்டு வருகிறது. மேலும் கரோனா தொற்றின் சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிகள் மூடுவது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து, பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும்’’ என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.