மேல்மருவத்தூர் வந்தவர்களுக்கு கரோனா தொற்றா? - ஆதிபராசக்தி கோயிலில் ஆட்சியர் ஆய்வு

மேல்மருவத்தூர்  கோயிலில் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்கிறார் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத்.
மேல்மருவத்தூர் கோயிலில் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்கிறார் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத்.
Updated on
1 min read

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்தவர்களுக்கு கரோனா தொற்று பரவியதாக வந்த தகவலைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் நேற்று ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு தைப்பூசத்தை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி எடுத்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கர்நாடக மாநிலத்தில் பலருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது. அப்போது கரோனா உறுதியான சிலர் மேல்மருவத்தூர் கோயிலுக்கு வந்து சென்றதாக கூறியதாக தெரிகிறது.

இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் நேற்று மேல்மருவத்தூர் கோயிலில் ஆய்வு செய்தார். கரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா, அங்கு பணி செய்பவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்று கேட்டறிந்தார். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், அரசின் கரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் கோயிலில் பணி செய்பவர்கள், கடை வைத்துள்ளவர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூர் வந்த பக்தர்கள் சிலருக்கு கரோனா தொற்று பரவியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதன் உண்மை தன்மை குறித்து விசாரித்து வருகிறோம். கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். எனவே கரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்ற வலியுறுத்தியுள்ளோம்.

அதேபோல் இந்தச் செய்தி வந்ததற்கு பிறகு அனைத்து ஊழியர்கள், உணவு சமைப்பவர்கள், கடை நடத்துபவர்கள் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை செய்து அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளோம். அதைக் கண்காணிக்க குழு அமைத்துள்ளோம். கோயில்களில் தமிழக அரசு அறிவித்துள்ள அறிவுரைகள் பின்பற்றப்படும். கரோனாவை பொறுத்தவரை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in