

சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திவருகிறார்.
தமிழகத்தில் நேற்று 1,728 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் புதியதாக 876 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் 121 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. மேலும் 150 பேருக்கு ஒமைக்ரான் தொற்றின் மரபணு மாற்றம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் 250 பேருக்கு மேல் ஒமைக்ரான் பாதிப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கோவா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த மாதம் இறுதி வரை பள்ளிகள் மூடப்படும். ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் எனப் பிற மாநிலங்கள் அறிவித்துவிட்டன. தமிழகத்தில் கடந்த டிசம்பர் 31 அன்று தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கோவா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த மாதம் இறுதி வரை பள்ளிகள் மூடப்படும். ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் எனப் பிற மாநிலங்கள் அறிவித்துவிட்டன.
தமிழகத்தில் ஏற்கெனவே பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி, கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லத் தடை, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை, உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு 50 சதவீத இருக்கைகள் மட்டும் அனுமதி, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
புதிய கட்டுப்பாடுகள் வர வாய்ப்பு?
சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக குறிப்பாக கடந்த 2 நாட்களாக தொற்று பாதிப்பு மிக அதிகமாக உள்ளதால் அம்மாவட்டங்களின் ஆட்சியர்கள் ஆன்லைன் வழியாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள்.
தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் வரும் 10ஆம் தேதியுடன் முடியும் நிலையில் அதனை கடுமையாக்கப் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வார இறுதியில் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்வதில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.