

வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட மேம்பாலப் பணிகள், தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும் இன்னும் முடியவில்லையே எனப் பொதுமக்கள் கேட்கின்றனர். பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டலூர் - கிளாம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கடவுப்பாதையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், ரூ.37.95 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. 11 ஆண்டுகளாக மிகவும் மெதுவாக நடைபெற்று வந்த பாலப் பணியால் இப்பகுதி மக்கள் தினமும் 4 கிமீ சுற்றிச் சென்றுவர வேண்டியுள்ளது. எனவே, பணிகளை விரைந்து முடிக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரி வருகின்றனர். திமுகவின் திட்டம் என்பதால்தான் கடந்த அதிமுக ஆட்சியில் மேம்பாலப் பணி சரிவர நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
வண்டலூர் - கிளாம்பாக்கம் சாலையில், மண்ணிவாக்கம் விரிவு, செல்லியம்மன் நகர், ஓட்டேரி விரிவு, திடீர் நகர், கலைஞர் ராசாத்தியம்மாள் நகர் உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. இந்த சாலையில், கிளாம்பாக்கம் அருகே ரயில்வே கடவுப்பாதை அமைந்துள்ளது. இது அவ்வப்போது மூடப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கிளாம்பாக்கம் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு, கடந்த 11 ஆண்டுகளாக இதுவரை 90 சதவீத பணிகளே முடிந்துள்ளன. அதேசமயம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பில் ரூ.55 கோடியில் உயர்நிலை மேம்பாலம், அதிமுக ஆட்சிக் காலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. 2020 செப்டம்பரில் திறக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே போக்குவரத்து மாற்றம் காரணமாகச் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருகிறோம். இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தும் கிளாம்பாக்கம் பாலப் பணிகளில் வேகம் இல்லை. பல்வேறு மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டியுள்ள துறை அமைச்சர், இந்தப் பாலத்தை முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு முழு முயற்சி எடுத்து மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.