அடுத்தவரை குறை சொல்லி அரசியல் செய்கிறார் நாராயணசாமி: அமைச்சர் நமச்சிவாயம் சாடல்

புதுவை அமைச்சர் நமச்சிவாயம் | கோப்புப் படம்.
புதுவை அமைச்சர் நமச்சிவாயம் | கோப்புப் படம்.
Updated on
2 min read

புதுவை: நாராயணசாமி அடுத்தவரை குறை சொல்லித்தான் அரசியல் செய்திகிறார். ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யவில்லை என புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (ஜன. 2) செய்தியாளர்களிடம் கூறியதாவது:‘‘முன்னாள் முதல்வர் நாராயணசாமி அடுத்தவரை குறை சொல்லித்தான் அரசியல் செய்கிறார். இதுவரை ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யவில்லை. முதல்வராக இருக்கும்போது கூட ஆளுநரையும், மற்றவர்களையும் குறை சொல்லி தான் ஆட்சி செய்தார்.

தற்போது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முதல்வர் மீதும், அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றம் கூறுகிறார். அவர் அரசியல் ரீதியாக குற்றம் சொல்கிறாரே தவிர, அதுமாதிரியான எந்த ஒரு நிகழ்வும் இந்த ஆட்சியில் நடைபெறவில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

கரோனா நிவாரணம், முதியோர் பென்ஷன் உயர்வு, மழை நிவாரணம் என பல்வேறு விதமான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்கிறது.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

இதையெல்லாம் பார்த்து அரசுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் வந்துவிட போகிறது என்பதற்காக, வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அரசின் மீது பழி சுமத்துவதற்காக இந்த குற்றச்சாட்டை சொல்லியுள்ளார். மின்துறையை தனியார் மயமாக்குவது குறித்து அரசு பேசி வருகிறது.

அதற்கு ஒருசில தொழிலாளர்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகிறார்கள். அவர்களை அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்தபோதும் வரவில்லை. இதுமாதிரியான சூழலில் அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கையை அறிவிக்கும். புதுச்சேரியில் அதிகாரப்போட்டிக்கு வேலையில்லை. முதல்வர் பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ சந்திக்கவில்லை என்பதெல்லாம் வேறு விஷயம்.

அதற்கும், நிர்வாகத்துக்கும் எந்தவொரு இடையூறும் கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல்வர் ரங்கசாமி எந்த திட்டத்தை மத்திய அரசிடம் கேட்கிறாரோ, அந்த திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக மத்திய அரசு ஒப்புதல் கொடுத்து வருகிறது. எந்த திட்டத்தையும் நிறுத்தவில்லை.

போக்குவரத்துப் பிரச்னையை தீர்க்க ரூ.400 கோடிக்கு மேம்பாலம் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக அரசிடம் நிலம் கையகப்படுத்துவதற்கு கடிதம் அனுப்பியுள்ளது. புதிய சட்டப்பேரவை கட்ட ரூ.300 கோடிக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பாஜக அமைச்சர்களும், தலைவர்களும் நேரடியாக மத்திய அமைச்சர்களை சந்தித்து என்னென்ன கோரிக்கை வைக்கிறோமோ, அதனை நிறைவேற்ற மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும் தயாராக உள்ளனர்.

எந்த திட்டத்தை மத்திய அரசு நிறுத்தியது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூற வேண்டும். தேசிய இளைஞர் விழாவுக்கு பிரதமர் வருவதற்கு அனைத்து தயாரிப்பு திட்டங்களும் தயார் செய்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு ஒப்புதல் கிடைத்தவுடன் பிரதமரின் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும்.

மேலும், தேசிய இளைஞர் தினவிழா கரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றியே நடைபெறவுள்ளது. 2 தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்க முடியும். புதுச்சேரியில் 2 பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிகப்படியாக தொற்று வரவில்லை. ஏற்கனவே 2 ஆண்டுகள் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுள்ளோம். பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க வேண்டும். ஆன்லைன் கல்வி எந்த அளவுக்கு பிள்ளைகளுக்கு போதிக்க முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதனால் பள்ளி கல்வி குறித்து கரோனா தாக்கத்தின் சூழல்நிலைக்கு ஏற்ப முடிவை அரசு எடுக்கும்.’’ இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in