

கரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலக பேரவை கூட்ட அரங்கில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பேரவைக் கூட்டம், கலைவாணர் அரங்குக்கு மாற்றப்பட்டுள்ளது.
கரோனா காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை நடந்த சட்டப்பேரவை கூட்டங்கள் தலைமைச் செயலககூட்ட அரங்குக்குப் பதில், கலைவாணர் அரங்கின் 3-ம் தளத்தில் நடத்தப்பட்டன. தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையின் இந்தஆண்டுக்கான முதல் கூட்டம் வரும் 5-ம் தேதி புதன்கிழமை தலைமைச் செயலக கூட்டஅரங்கில் நடைபெறும் என்றும்,அன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார் என்றும் சமீபத்தில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்திருந்தார்.
இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கம் புதுப்பொலிவுடன் தயாராகிவந்தது. காகிதமில்லா சட்டப்பேரவை என்ற அடிப்படையில், உறுப்பினர்களின் இருக்கையில் கையடக்க கணினி பொருத்தும் பணிகள், கூட்டத்தை நேரலை செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வந்தன.
பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த நிலையில், தமிழகத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசியல், மதம்சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்கம், உணவகங்கள், வணிக வளாகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், தற்போது சட்டப்பேரவை கூட்டத்தை பேரவை கூட்ட அரங்கில் நடத்துவது குறித்துஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது ஆளுநரின் ஒப்புதலை பெற்று, மீண்டும் கலைவாணர் அரங்கிலேயே கூட்டத்தைநடத்த முடிவெடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், பேரவைக் கூட்டஅரங்குக்கு பதிலாக, கலைவாணர் அரங்கின் 3-ம் தளத்தில் உள்ள பன்னோக்கு கூட்ட அரங்கில் ஜன.5-ம் தேதி காலை 10 மணிக்குதொடங்கும் என்று ஆளுநர் ஒப்புதலுடன், பேரவைச் செயலர் கே.சீனிவாசன் அறிவித்துள்ளார். அன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது.