

தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்காகவே வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்க உள்ளது என தருமபுரி பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
தருமபுரியில் நேற்று முன்தினம் இரவு திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலை மை வகித்தார். கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியது:
திமுக என்பது கட்சியல்ல, இது ஓர் இயக்கம். தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் சர்வாதிகார போக்கு ஏற்பட்டு விடும். தற்போது தமிழகத்தில் நடந்து வரும் சர்வாதிகார ஆட்சியில் இருந்து தமிழகத்தை காப்பாற்றுவதற்காகவே திமுக ஆட்சியில் அமரப் போகிறது.
இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச் செல்வன், நகரச் செயலாளர் தங்கராஜ், மாநில தீர்மானக் குழு உறுப்பினர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.