

கொல்லஅள்ளி அரசுப் பள்ளியில் உள்ள பழுதான, பயனற்ற நிலையில் உள்ள வகுப்பறை கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கம்மம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் கொல்லஅள்ளி. இக்கிராமத்தில் கடந்த 1959-ம் ஆண்டு ஆரம்ப பாடசாலையாக தொடங்கப்பட்டது. அப்போது மேற்கூரையில் ஓடுகளுடன் கூடிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.
இப்பள்ளி தற்போது படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு, அரசு உயர்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பழையூர், ஒண்டியூர், கொட்டாவூர், கொல்லஅள்ளி உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி 1959-ல் தொடங் கப்பட்ட போது கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம் தற்போது பழுதடைந்தும், பயனற்ற நிலையிலும் காணப்படுகிறது. மழை, சூறாவளி காற்றுக்கு ஓடுகள், கட்டிடம் உள்ளிட்டவை சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கம்மம்பள்ளி ஊராட்சித் தலைவர் சென்றாயன் கூறும்போது, 1959-ம் ஆண்டு ஆரம்ப பாடசாலையாக தொடங்கப்பட்ட இப்பள்ளியில் கட்டப்பட்ட வகுப்பறை, தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த 2010-11-ம் ஆண்டில் வகுப்பறைக்கான கீழ்மட்ட சாய்தளமும் அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வகுப்பறை கட்டிட சுவரில் விரிசல் ஏற்பட்டும், ஓடுகள் பெயர்ந்தும் விழுந்ததால், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் சுமார் 8 ஆண்டு களுக்கு மேலாக வகுப்பறை பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனை அகற்றக்கோரியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி பயனற்ற வகுப்பறை கட்டிடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.