4 மாவட்டங்களில் ரூ.272.68 கோடியில் கட்டப்பட்ட 4,044 குடியிருப்புகளை முதல்வர் திறந்துவைத்தார்: திருநங்கைகள், பயனாளிகளிடம் ஒதுக்கீடு ஆணையை வழங்கினார்

4 மாவட்டங்களில் ரூ.272.68 கோடியில் கட்டப்பட்ட 4,044 குடியிருப்புகளை முதல்வர் திறந்துவைத்தார்: திருநங்கைகள், பயனாளிகளிடம் ஒதுக்கீடு ஆணையை வழங்கினார்
Updated on
1 min read

சென்னை, காஞ்சிபுரம், கோவை, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் ரூ.272 கோடியே 68 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 4,044 அடுக்குமாடி குடியிருப்புகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்துவைத்தார். திருநங்கைகள் உள்ளிட்ட 11 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு இருக்க வேண்டும். தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குகளை அடையும் விதத்தில், குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கடந்த 5 ஆண்டுகளில் நகர குடிசைவாழ் குடும்பங்களுக்காக ரூ.2,683 கோடியே 42 லட்சம் செலவில் 60,595 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள குடிசைப்பகுதிகளில் ரூ.1,411 கோடியே 59 லட்சத்தில் கூடுதலாக 34,013 குடியிருப்புகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சமுதாயத்தில் ஏழை மக்களுக்கு மட்டுமின்றி திருநங்கைகளுக்கும் நிரந்தர வீடுகள் கிடைக்கும் நோக்கில், 260 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒதுக்கியுள்ளார்.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் சென்னை பார்த்தசாரதி நகர் திட்டப்பகுதியில் 128, சத்தியவாணி முத்துநகர் திட்டம் 392. நேருபார்க் (பி.எச்.நகர்) திட்டத்தில் 288, பிள்ளையார் கோயில் தெரு திட்டம் 32, லாக்நகர் 304, அடிமான்ய தோட்டம் 48, கோட்டூர்புரம் 136, காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் 2,048, கோவை சுண்டகாமுத்தூர் மலைநகரில் 224, சூலூரில் 240, ஈரோடு மாவட்டம் சூரியம்பாளையம் திட்டத்தில் 204 என 4,044 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

இக்குடியிருப்புகளில் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை, பால்கனி, குளியலறை, கழிப்பறை ஆகிய வசதிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ரூ.8 லட்சத்து 91 ஆயிரம் செலவில் 396 சதுரஅடி கட்டிட பரப்பில் அமைந்துள்ளது. அடிப்படை வசதிகளான சாலை, நடைபாதை, குடிநீர், கழிவுநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

ரூ.272 கோடியே 68 லட்சத்தில் கட்டப்பட்ட இக்குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 6 குடும்பங்கள், 5 திருநங்கைகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கினார். இதில் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், பா.வளர்மதி, பி.தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in