

ஈரோடு; கோபி அருகே பாதை வசதி இல்லாததால், கீரிப்பள்ளம் ஓடையில் தற்காலிக பாலம் அமைத்து உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.
கோபி அருகில் உள்ள பா.வெள்ளாளப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது சாணார்பதி கிராமம். இங்கு சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் இறந்தால், கீரிப்பள்ளம் ஓடையை கடந்து சென்று அங்குள்ள மயானத்தில் உடலை அடக்கம் செய்து வருகின்றனர். இதற்காக ஓடையின் குறுக்கே இருந்த சிறிய அளவிலான தரைப்பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.
மழைக்காலங்களில் ஓடையில் அடித்து வரப்படும் கழிவுகள், குப்பைகள் அந்த தரைப்பாலத்தில் அடைத்து கொள்வதால், மழைநீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலத்தை அதிகாரிகள் அங்கிருந்து அகற்றினர். இதற்கு மாற்றாக மேம்பாலம் கட்டித்தரப்படும் என அளிக்கப்பட்ட உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இதனால் யாராவது இறந்தால், ஓடையில் செல்லும் தண்ணீரில் இறங்கி உடலை மயானத்திற்கு பொதுமக்கள் கொண்டு சென்று வந்தனர். கீரிப்பள்ளம் ஓடையில் தண்ணீர் அதிகமாகச் செல்லும் காலங்களில், சொந்த செலவில் தற்காலிக பாலம் அமைத்து உடல்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சாணார்பதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவரின் மனைவி மரகதம் (88) என்பவர் இறந்தார். அவருடைய உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதற்காக, அவருடைய உறவினர்கள், ஓடையின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து, பெரிதும் சிரமத்திற்கு இடையே உடலை கொண்டு சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர்.
மயானத்திற்கு உடல்களை எடுத்து செல்லும் வகையில் பாலம் அமைத்துத் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.