

திமுகவை நாங்கள் விரோதியாக பார்க்கவில்லை. யார் நல்லது செய்தாலும் அவர்களைப் பாராட்டுவோம் என்று மதுரை ஆதீனம் கூறினார். இதுதொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி:
# முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி காரைக்குடியில் நடந்த சர்வமத பிரார்த்தனையில், ‘அம்மாவை மீண்டும் முதல்வராக்கவே மதுரை ஆதீனம் இன்னும் உயிரோடு இருக்கிறது’ என்று பேசியிருக்கிறீர்கள். உண்மையிலேயே ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக ஆக்குவதற்காகத்தான் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா?
ஆமாம்.. அதிலென்ன சந்தேகம்? ‘அம்மா’வுக்கு வாரிசு கிடையாது. தமிழக மக்கள்தான் அவரது வாரிசு. அந்த வகையில் மதுரை ஆதீனமும் அவருக்கு ஒரு வாரிசுதான். மீண்டும் ‘அம்மா’ முதல்வராக வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டி ருக்கிறோம். அதற்காகவே உயிர் வாழ்கிறோம்.
# ஆதீனத்துக்கு இவ்வளவு தீவிர அரசியல் தேவைதானா?
சந்நிதானமும் ஒரு வாக்காளர்; இந்திய குடிமகன். அதனால், ஒரு சிறந்த ஆட்சியை ஆதரிக்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது. நல் லதை ஆதரிக்கும் அதேநேரத்தில் மற்ற கட்சிகளையோ, தலைவர்களையோ நாங்கள் குறை சொல்வதில்லை. ‘அம்மா’ வின் நிர்வாகம் பிடித்திருக்கிறது. அத னால், அவரை பாராட்டுகிறோம்.
# அதிமுக ஆட்சியில் நிர்வாகம் முடங்கிவிட்டது, ஊழல் அதிகரித்துவிட்டது என்றெல்லாம் விமர்சிக்கப்படுகிறதே?
அரசு நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. முறை தவறி நடப்பவர்களை கண் காணித்து மிகச் சரியாக நடவடிக்கை எடுக்கி றார் முதல்வர். அப்படித் தான் அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படு கின்றன. தேர்தல் நேரம் என்றுகூட பார்க்காமல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போதே தெரியவில்லையா இந்த ஆட்சியின் நேர்மை.
# ஆளும்கட்சியை ஆதீனம் ஆதரிக்க என்ன காரணம்?
பசி, பட்டினி இல்லாமல், ரவுடிகள் தொல்லை இல்லாமல், அரசியல்வாதிகளின் அராஜகங்கள் இல்லாமல் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். மக்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆதீனத்தின் விருப்பம். அந்த விருப்பத்தை நிறைவேற்றுகிற ஒரு ஆட்சியை ஆதரிக்காமல் அர்ச்சிக்கச் சொல்கிறீர்களா?
# திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்கிறார்களே?
சந்நிதானம் ஒன்றும் அஸ்ட்ராலஜர் அல்ல. தேமுதிக-வுடன் இன்னும் உடன் பாடு ஏற்படவில்லை என்று கேள்விப் பட்டோம். அப்படி உடன்பாடு ஏற்பட்டால் அப்போது வந்து கேளுங்கள். பதில் சொல்கிறேன்.
# திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் அப்போதும் ஆளும் கட்சியை ஆதீனம் பாராட்டுமா?
திமுக உட்பட யாரையும் சந்நிதானம் விரோதியாக பார்ப்பதில்லை. நல்லது செய்பவர்களை பாராட்டுவோம். எங்களைப் பொறுத்தவரை மக்கள் சுபிட்சமாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.