பாண்டி மெரினா கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கும் போட்டி: ஆர்வமுடன் பங்கேற்ற குழந்தைகள்  

புதுவைக் கடற்கரையில் மணல் சிற்பம் செய்யும் குழந்தைகள்
புதுவைக் கடற்கரையில் மணல் சிற்பம் செய்யும் குழந்தைகள்
Updated on
1 min read

புதுச்சேரி: பாண்டி மெரினா கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கும் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளைக் கவர பாண்டி மெரினா கடற்கரை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உணவுப் பூங்கா, குழந்தைகளை மகிழ்விக்க பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாண்டி மெரினா கடற்கரையில் குழந்தைகள் மணல் சிற்பம் உருவாக்கும் போட்டி இன்று (டிச. 19) நடைபெற்றது. நமது பாரம்பரிய விளையாட்டுக் கலைகளில் ஒன்றான மணல் வீடு கட்டும் கலையின் மறு உருவமான மணல் சிற்பம் உருவாக்குவதை இன்றைய குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியும், பெற்றோர்களின் குழந்தைப் பருவத்தை மறுநினைவுப்படுத்தும் விதமாகவும் மணல் சிற்பம் உருவாக்கும் போட்டி நடைபெற்றது.

புதுவைக் கடற்கரையில் குழந்தைகள் உருவாக்கிய மணல் சிற்பங்கள்
புதுவைக் கடற்கரையில் குழந்தைகள் உருவாக்கிய மணல் சிற்பங்கள்

இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள், தங்களது பெற்றோருடன் ஆர்வமாக பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். புதுச்சேரியின் பாரதி பூங்கா, கலங்கரை விளக்கம், கடற்கரை, கோட்டை, டால்பீன் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் மணல் சிற்பங்களை அமைத்தனர்.

பாண்டி மெரினா நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் கலைநயத்துடன் பல்வேறு வகைகளில் சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருந்ததை கலைமாமணி ரவி, அரசு பள்ளி கலையாசிரியர் ராஜூ கண்ணன் மற்றும் அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனர் ராஜேந்திரன் ஆகியோர் நடுவர்களாக பார்வையிட்டு, சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.

இதில் சஞ்சனாஸ்ரீக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், ஜனனிக்கு இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், தன்விஸ்ரீக்கு மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம், கலைத்தமிழனுக்கு நான்காம் பரிசாக ரூ. 1,000 வழங்கப்பட்டது. மேலும் ஊக்கப்பரிசுகளாக 10 பேருக்கு ரூ.1,000மும் வழங்கப்பட்டது. இது தவிர, பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் நினைவுப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழாண்டு தொடங்கிய இந்த மணல் சிற்பம் உருவாக்கும் போட்டி வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படும். இதனால் பெரியவர்கள், சிறியவர்கள் வரை நமது பாரம்பரிய மணல் வீடுகளை கட்டி உற்சாகம் அடைவர் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in