

புதுச்சேரி: சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்த நடிகர் சந்தானம் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். படப்பிடிப்புக்கான வரியைக் குறைக்கக் கோரியதையடுத்து, விடுப்பில் சென்றுள்ள ஆட்சியர் வந்தவுடன் வரி குறைக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்தார்.
புதுச்சேரியில் தமிழ், மலையாளம், தெலுங்கு எனப் பல மொழித் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடத்தப்படுகின்றன. நகராட்சி சார்பில் ரூ.5 ஆயிரம் முன்பு வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது படப்பிடிப்புக்கான வரி உயர்த்தப்பட்டு ரூ.28 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
வருவாய் குறைவாக உள்ள சூழலிலும் பிற மாநிலங்களை விடக் கட்டணம் குறைவாக இருந்தாலும் திரை நட்சத்திரங்கள் இக்கட்டணத்தைக் குறைக்குமாறு முதல்வர் ரங்கசாமியை வலியுறுத்தி வருகின்றனர். புதுச்சேரிக்குப் படப்பிடிப்புக்கு வந்த நடிகர்களான கே.பாக்யராஜ், விஜய் சேதுபதி, பிரசாந்த் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் முழுக்கப் படமாக்கவுள்ள புதிய படப்பிடிப்புக்காக புதுச்சேரி வந்த நடிகர் சந்தானம் முதல்வர் ரங்கசாமியைச் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று சந்தித்தார். அப்போது முதல்வர் ரங்கசாமியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.
அப்போது நடிகர் சந்தானம், "புதுச்சேரியில் 40 நாட்களுக்குப் படப்பிடிப்பு நடத்த உள்ளோம். படப்பிடிப்புக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதைக் குறைக்க வேண்டும்" என்று கேட்டார். அதற்கு முதல்வர் ரங்கசாமி, "ஆட்சியர் ஊரில் இல்லை. அவர் வந்தவுடன் கட்டணத்தைக் குறைக்கவுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சந்தானம், "படப்பிடிப்புக் கட்டணத்தைக் குறைக்கக் கோரினோம். முழு திரைப்படத்தையும் இங்கு படமாக்கவுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
இட ஒதுக்கீடு தொடர்பான கேள்விகளுக்கு பதில் தர சந்தானம் மறுத்துவிட்டார்.