

ஈரோடு: ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணியோடு தொடர்பில் இருந்தவர்களுக்குச் சொந்தமான 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் தங்கமணி, வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 6:45 மணி முதல் 18 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தங்கமணிக்குச் சொந்தமான இடங்களிலும் இந்த சோதனை நடக்கிறது. நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், வேலூர், சென்னை, ஆந்திரா, கர்நாடகா என மொத்தம் 69 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தங்கமணிக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள், தொழில் பங்குதாரர்கள் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் தங்கமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடங்கிய நிலையில், ஈரோடு மாவட்டத்தில் 11 இடங்களில் சோதனை தொடங்கியுள்ளது.
ஈரோட்டில் பாரி வீதி, பண்ணை நகர், கணபதி நகர், முனியப்பன் கோயில் வீதி, பவானி, சித்தோடு உள்ளிட்ட 11 இடங்களில் 100க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு சூளை அருகேயுள்ள முனியப்பன் கோயில் வீதியில் சிவானந்தம் என்பவருடைய வீட்டிலும், பண்ணை நகரிலுள்ள செந்தில்நாதன் என்பவருடைய வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஈரோடு குமலன் குட்டை, கணபதி நகர் பகுதியில் தங்கமணியின் உறவினரான சின்னதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.