பசி இல்லாத புதுச்சேரியை உருவாக்க அரசு முயற்சி செய்கிறது: ஆளுநர் தமிழிசை

பசி இல்லாத புதுச்சேரியை உருவாக்க அரசு முயற்சி செய்கிறது: ஆளுநர் தமிழிசை
Updated on
2 min read

பசி இல்லாத புதுச்சேரியை உருவாக்க அரசு முயற்சி செய்கிறது எனவும், ஆரோவில்லில் இயற்கை எவ்விதத்திலும் அழியாமல் பாதுகாக்கப்படும் எனவும் ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

பாரதியாரின் 140-வது பிறந்த நாள் விழா இன்று (டிச.11) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள பாரதியாரின் சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா, சாய் ஜெ. சரவணன்குமார், சபாநாயகர் செல்வம் மற்றும் எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ஈஸ்வரன் கோயில் வீதியிலுள்ள பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் பாரதியாரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அங்கு பாரதியார் பாடல்கள் இசைக்க, நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர்.

பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘பாரதியாரின் புகழைப் பாடும் அளவுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. துணைநிலை ஆளுநர் மாளிகையிலும் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ‘தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சொன்னார் பாரதி. அப்படி ஒரு பசுமையான புதுச்சேரியை, பசி இல்லாத புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்பதற்காக அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த 10 ஆண்டுகள், ஒரு வளர்ச்சியடைந்த நாட்டை, புதுச்சேரியை உருவாக்க கனவு கண்டார். அத்தகைய புதுச்சேரியை உருவாக்க பாரதியின் பிறந்த நாளில் நாம் சபதம் ஏற்போம். பாரதியார் அவரது வாழ்நாளில் 10 ஆண்டுகள், மூன்றில் ஒரு பங்கு புதுச்சேரியில் கழித்திருக்கிறார்.

புதுச்சேரியில் எல்லா இடங்களிலும் அவருடைய ஆன்மா உலவிக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். பாரதிக்கு வானுயர சிலை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தேன். முதல்வருடன் ஆலோசனை செய்து இதற்காகக் குழு அமைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறேன்.

வெளிநாடுகளில் இருந்தும் தமிழர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு இத்தகைய முயற்சியில் நாங்களும் எங்களது பங்கை அளிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள். ஆகவே, பாரதிக்கு ஒரு வானுயர சிலை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதற்கான முயற்சியில் இறங்குவோம். முதல்வரிடமும் ஆலோசித்து முடிவு செய்வோம். இயற்கை அழியாமல் பாதுகாக்கப்படும்.

ஆரோவில் நிர்வாகத்துக்கு ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் தலைவராக தமிழக ஆளுநரும், உறுப்பினராக நானும் இன்னும் மூன்று ஆளுமைகளும் உறுப்பினர்களாக இருக்கிறோம். அன்னை கனவு கண்ட நகரம் 50 ஆண்டுகாலமாக உருவாகவில்லை என்ற எண்ணம் இருக்கிறது. அங்கு இயற்கையை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இல்லை. அன்னை கனவு கண்ட நகரம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இங்கு எடுக்கப்படும் பழமையான மரங்கள் வேறு இடத்தில் நடப்படுகின்றன. இயற்கை எந்தவிதத்திலும் அழியாமல் பாதுகாக்கப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன்.’’

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in