

பிபின் ராவத் உருவப் படத்துக்குப் புதுச்சேரி சட்டப்பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த காட்டேரிப்பள்ளம் அருகேயுள்ள நஞ்சப்ப சத்திரம் குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மறைவுக்குப் பலரும் அஞ்கலி செலுத்தி வருகின்றனர். புதுச்சேரியிலும் பல்வேறு இடங்களில் பிபின் ராவத் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (டிச.10) பிற்பகல் நடைபெற்றது. சட்டப்பேரவை வளாகத்தில் வைத்திருந்த மறைந்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உருவப் படத்துக்கு முதல்வர் ரங்கசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், நமச்சிவாயம், சாய் ஜெ சரவணன்குமார் மற்றும் எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.