

அண்ணா பல்கலைக்கழகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 9 மாணவர்களும் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் முறையாக சமூகஇடைவெளியை கடைபிடிக்குமாறும், தனித்தனியே அமர்ந்து சாப்பிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்கள் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்திலும், மாணவர் விடுதியிலும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏ.சி. டெக் வளாகத்தில் கடந்த 8-ம்தேதி ஒரு மாணவருக்கு தொற்றுஉறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த வளாகத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 9 மாணவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் 9 பேரும் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாணவர்கள் உணவு உண்ணும்இடங்களில் கூட்டமாக அமராமல், தகுந்த சமூக இடைவெளியுடன் உணவு உண்ண அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் நேரம் ஒதுக்கி, தனித்தனியாக உணவு உண்ணுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் கரோனாதடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக சென்னை மாநகராட்சி, பள்ளிக்கல்வி துறை, உயர்கல்வி துறை இணைந்து 10-ம் தேதி(இன்று) ஆலோசிக்கின்றன.
ஒமைக்ரான் இல்லை
தொற்று ஏற்பட அதிக ஆபத்துநிறைந்த 13 நாடுகளில் இருந்துநேற்று காலை 8 மணி நிலவரப்படி, 9,012 பேர் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் 11 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற 9,001 பேரும் அவரவர் இல்லங்களில் ஒரு வாரத்துக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
தொற்று பாதிப்பு ஏற்பட குறைந்தஆபத்து கொண்ட நாடுகளில் இருந்து வந்த 33,112 பேரில் 2 சதவீதமான 1,025 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களது சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. 13 பேருக்கும் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை தெற்கு வட்டார துணை ஆணையர் சிம்ரன் ஜீத் சிங் காஹ்லோன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களுக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டதால் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் கொண்டு வரப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘கரோனா பாதிப்பை கருத்தில்கொண்டு மீண்டும் ஆன்லைன்வகுப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போது வரை நேரடி வகுப்புகள்தான் நடந்து வருகின்றன’’ என்றனர்.
698 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழகத்தில் நேற்று 409 ஆண்கள், 289 பெண்கள் என 698 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று 746 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம்முழுவதும் 7,883 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார்மருத்துவமனைகளில் நேற்று 15பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.