

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் தேதி கடந்த 4-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
அப்போதிலிருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அந்த விதிகளை மீறி, தற்போது தமிழகத்தில் வெள்ள நிவாரண நிதி, சம்பந்தப்பட்ட பயனாளி களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.
உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம் தொகுதி யைச் சேர்ந்த ஜி.வசந்தி என்ற பெண்ணின் வங்கிக்கணக்குக்கு ரூ.5ஆயிரம் கடந்த 9-ம் தேதி செலுத்தப்பட்டுள்ளது. இது ஆளும் அதிமுக அரசுக்கு சாதகமாக அமையும். எனவே, மாநிலம் முழுவதும் இதுபோல் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படுவதை தடுக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என மாநில அரசை வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இக்கடிதம் இந்திய தேர்தல் ஆணையர்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் முதன்மை பொது மேலாளருக்கும் அனுப்பப் பட்டுள்ளது.