நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக சம்பிரதாயத்துக்காக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் டிச.16-ல் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக சம்பிரதாயத்துக்காக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் டிச.16-ல் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவு
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக வெறும் சம்பிரதாயத்துக்காக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக தலைமைச் செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, ஒரு வாரத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகள்குறித்த புள்ளி விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

அந்த அறிக்கை சம்பிரதாயத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இதில் எந்த விவரமும் இல்லை எனக் கூறி அதிருப்தி தெரிவித்தனர்.

“தமிழகம் முழுவதும் உள்ளநீர்நிலைகளில் 57,688 ஆக்கிரமிப்புகள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில் 8,797 ஆக்கிரமிப்புகள் மட்டுமேஅகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய அதிகாரிகள் யாரையும் மன்னிக்க முடியாது. அதிகாரிகள் செய்யும் தவறுக்காக தமிழக அரசை குறை கூற முடியாது” என எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர், டிச.16அன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

அர்ப்பணிப்புடன் அரசு செயல்படுகிறது: தலைமைச் செயலர் அறிக்கை

தலைமைச் செயலர் வெ.இறையன்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தமிழக அரசு முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்கவும், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை நிறைவேற்றி வருகிறோம். மேலும் கடந்தாண்டு இதுதொடர்பாக விரிவான அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீர்நிலைகளில் கட்டுமானங்கள் இருந்தால் அதற்கு மின் இணைப்பு, வீட்டு வரி ரசீது, திட்ட அனுமதி தரக்கூடாது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதம் 4 முறை பெய்த கனமழையால் ஆயிரம் மி்ல்லி மீட்டருக்கு மேல் மழைப்பொழிவு பெய்ததால் வெள்ள நீர் ஆங்காங்கே தேங்கியது. அதையும் அகற்ற துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in