

புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1 லட்சத்து 30 ஆயிரம்தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய முரண்பாடு, போனஸ் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதேபோல், 13-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னும் 14-வதுபுதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தவில்லை. எனவே, இனியும் தாமதிக்காமல் பேச்சுவார்த்தை விரைவில்தொடங்க வேண்மென வலியுறுத்திசிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதற்கிடையே, சென்னை பல்லவன் இல்லத்தில் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில்,தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 500 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக சிஐடியு மாநகரபோக்குவரத்து கழக ஊழியர் சங்கபொதுச்செயலாளர் வி.தயானந்தம் கூறும்போது, ‘‘சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வழக்கமான நாட்களில் முழு அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், விடுமுறை நாட்களில்சுமார் 1,000 பேருந்துகளின் சேவைகள் குறைக்கப்படுகின்றன. இதனால், பணி செய்யும் தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணியும் வழங்காமல் சொந்த விடுப்பில் செல்லுமாறு கட்டாயப்படுத்துகின்றனர். வேலைமறுக்கப்பட்டவர்களுக்கு வருகைப்பதிவு வழங்கி சம்பளம் வழங்க வேண்டும். பேட்டாவை உயர்த்தி வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முடித்து புதிய ஒப்பந்தம் உருவாக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம்’’என்றார்.