புதுச்சேரி அரசு பள்ளி, கோயிலில் மழைநீர் சேகரிப்பு தொட்டி: பொதுமக்கள் வரவேற்பு

புதுச்சேரி அரசு பள்ளி, கோயிலில் மழைநீர் சேகரிப்பு தொட்டி: பொதுமக்கள் வரவேற்பு
Updated on
1 min read

புதுச்சேரி பூரணாங்குப்பத்தில் தனியார் சமூக அமைப்பு ஒன்று அங்குள்ள அரசு பள்ளி மற்றும் கோயிலில் மழைநீர் சேகரிப்பு தொட்டியை அமைத்துள்ளது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

புதுச்சேரி பூரணாங்குப்பத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 140 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தலைமையாசிரியர் உட்பட 14 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த தனியார் சமூக அமைப்பு ஒன்று சென்னை தனியார் அமைப்புடன் இணைந்து இந்த பள்ளியில் மழைநீர் சேகரிப்பு தொட்டியை அமைத்துள்ளனர்.

4 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த பள்ளி கட்டிடத்தின் மாடியில் சேரும் மழை நீர் குழாய்கள் மூலம் ஒரே இடத்துக்கு வரவழைத்து இந்த தொட்டிகளில் சேகரமாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் தரையில் வட்டர வடிவிலான உரை கிணறுகளை அமைந்து அதனுள் 60 அடி ஆழத்துக்கு பிவிசி குழாய்களை பொறுத்தியுள்ளனர்.

அருகருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு மழைநீர் சேகரிப்பு தொட்டிகளில், ஒன்றில் கட்டிடத்தின் மாடியில் இருந்து வரும் மழைநீர் நேரடியாக வந்து விழுகிறது. அதில் இலைகள், சகதிகள் அனைத்தும் தேங்கிய பிறகு சுத்தமான தண்ணீர் மற்றொரு தொட்டியில் சென்று விழும் வகையில் அமைத்துள்ளனர். இதற்கு ரூ. 80 ஆயிரம் வரை செலவிட்டுள்ளனர்.

இதேபோல் பூரணாங்குப்பத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டியை இந்த அமைப்பினர் அமைத்துள்ளனர். இதன் மூலம் பள்ளி மற்றும் கோயிலுக்கு தேவையான தண்ணீர், நிலத்தடி நீர் மட்டம் உயர வழிவகை செய்துள்ளனர். இவர்களின் இந்த முயற்சி அப்பகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து தனியார் சமூக அமைப்பின் தலைவர் பூரணாங்குப்பம் ஆனந்தன் கூறும்போது,‘‘எங்கள் அமைப்பு மூலம் வீடு தேடி மரக்கன்று இலவசமாக வழங்கி வருகிறோம். ஏரிகள், குளங்களை சுற்றி பனை விதைகளை புதைத்து வருகிறோம். தமிழகம், புதுச்சேரியில் மியவாக்கி காடுகளை உருவாக்கி உள்ளோம்.

வாய்க்கால்களை சுத்தம் செய்துள்ளோம். இதன் ஒரு பகுதியாக மழைநீர் சேகரிப்பு தொட்டியும் அமைத்து வருகிறோம். பூரணாங்குப்பம் பள்ளியில் கடந்த 2020-ல் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது. இதில் சேகரிக்கப்படும் தண்ணீர் பள்ளி தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போது பெய்து வரும் தொடர் மழையில் இந்த தொட்டி நிரம்பி, அதிகளவு மழைநீர் சேகரமாகியுள்ளது.

இதுபோல் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இங்குள்ள அங்காளம்மன் கோயிலில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தோம். அதுவும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இனி மழைநீர் சேகரிப்பு ஒன்றே சிறந்த வழி. இதனை அனைவரும் முன்னெடுக்க வேண்டும்.’’என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in