3-ம் அலையை எதிர்கொள்ள ஒப்பந்த பணியாளர்கள் நியமனம்: ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

புதுச்சேரியில் கரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள 675 சுகாதார பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நவ. 29 முதல் 30-ம் தேதி வரையிலான முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் புதுச்சேரி மாநிலத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைய 675 சுகாதாரப் பணியாளர்களை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் மேலும் 90 நாட்களுக்கு மீண்டும் பணியில் அமர்த்தவும் அதற்காக செலவினமாக ரூ. 3.51 கோடி ஒதுக்கீடு செய்தும் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேலை வாய்ப்புக்களை வரைமுறைப்படுத்தவும், அவர்களது நலனைப் பாதுகாக்கவும், மாநிலங்களுக்கு இடையேயான புலம் பெயர்ந்த தொழிலாளர் சட்டம் 1979 - ன் கீழ், உரிமம் வழங்கும் அதிகாரிகளாக புதுச்சேரி தொழிலாளர் அலுவலர் (அமலாக்கம்) காரைக்கால் தொழிலாளர் அலுவலர் ஆகியோரை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுமத்தின் திட்டங்கள், செயல்பாடுகளை மேம்படுத்தவும் டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தைப் பராமரிக்கவும் ரூ.90.47 லட்சம் நிதிக்கொடை வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இவ்வாறு ஆளுநர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in