கரோனா தடுப்பூசி போட மறுத்து சாமியாடிய மூதாட்டி: சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ

கரோனா தடுப்பூசி போட மறுத்து சாமியாடிய மூதாட்டி: சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ
Updated on
1 min read

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் கரோனா தடுப்பூசி போட மறுத்து மூதாட்டி ஒருவர் சாமியாடிய நிலையில் செவிலியர்கள் அங்கிருந்து புறப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி 100 சதவீதத்தை எட்ட வேண்டுமென்ற நோக்கத்துடன் புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை செவிலியர், ஆஷா பணியாளர், அங்கன்வாடி ஊழியர் உள்ளிட்டோர் அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்படி அங்குள்ள தட்சிணாமூர்த்தி நகரில் வசித்து வரும் ஒரு வயதான தம்பதியின் வீட்டுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள கேட்டபோது, வேண்டாமென தம்பதியினர் கையெடுத்து கும்பிடுகின்றனர்.

தொடர்ந்து வேண்டாம், வேண்டாம் போங்கள் என்றும் விரட்டுகின்றனர். அப்போது செவிலியர் தடுப்பூசி செலுத்தினால் ஒன்றுமே ஆகாது என்கிறார். உடனே திடீரென அங்கிருந்த மூதாட்டி சாமி வந்து மாரியம்மா, அங்காளம்மா ஆகாதுன்னு சொல்றேன் எனக் கத்துகிறார்.

அச்சமயம் அந்த மூதாட்டியின் கணவர், போங்கம்மான்னு உரக்க குரலுடன் சொல்கிறார். இதையடுத்து செவிலியர் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் சில மணித்துளிகள் அங்கு நின்றுவிட்டு, அங்கிருந்து திரும்பிச் செல்கின்றனர். இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சிலர் இந்த வீடியோவை விமர்த்தித்தும், சிலர் வடிவேல், கவுண்டமணி படங்களுடன் காமெடி மீம்ஸ்களை தயார் செய்தும் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தொடர்பாக சுகாதரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,

‘‘இந்த சம்பவம் உண்மை தான். மக்களிடம் புரிதல் இல்லை. சுகாதாரத்துறை தான் கஷ்டப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் அடுத்து, ஒமைக்கரான் வந்தால் புதுச்சேரியை காப்பாற்றுவது கடினமாகிவிடும்.’’என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in