

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வருவாய் நீதிமன்றத்தில் தனித்துணை ஆட்சியராக பணிபுரிபவர் பவானி. இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு புகார்கள் சென்றன. இதுகுறித்து போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து, திருவானைக்காவலில் உள்ள பவானியின் வீடு, பவானியை நிர்வாக உறுப்பினராகக் கொண்டு மண்ணச்சநல்லூர் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி, பவானியின் மகன் ஹர்ஷவர்தன் வாளாடியில் நடத்தி வரும் பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பவானி, அவரது மகன் ஹர்ஷவர்தன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பவானி 2014 - 21-ல் ரூ.5.04 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக புகார் வந்தது. பவானிதொடர்புடைய 3 இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1.25 லட்சம் ரொக்கம், 3 பவுன் நகை, 200 பவுன் நகைகளை அடகு வைத்ததற்கான ரசீது, 4.75 கிலோ வெள்ளி, பெட்ரோல் பங்க் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இவை தவிர காஞ்சி, செங்கல்பட்டில் 2 பெட்ரோல் பங்க்குகள், டியூப் தயாரிக்கும் தொழிற்சாலை, ரங்கத்தில் வெஸ்டா கட்டுமான நிறுவனம், ரங்கம், விருதுநகரில் தலா ஒரு வீடு, மண்ணச்சநல்லூர், உறையூர், கே.கே.நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள், 2 கார்கள், 2 இருசக்கர வாகனங்கள், 11 வங்கிகளின் கணக்குகள், 3 வங்கிகளில் உள்ள பெட்டகங்கள் குறித்த ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.