Published : 30 Nov 2021 01:35 PM
Last Updated : 30 Nov 2021 01:35 PM
புதுக்கோட்டையில் பழைய கட்டிடத்தை இடிக்கும்போது இன்று (நவ.30) எதிர்பாராமல் கட்டிடம் இடிந்து தகர்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை கிழக்கு 2-ம் வீதி பகுதியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார், 2 வாரங்களுக்கு முன்பு இக்கட்டிடத்தை வாங்கியுள்ளார். சுமார் 50 ஆண்டுகள் பழமையான இக்கட்டிடத்தை 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்டு கடந்த 3 நாட்களாக இடிக்கும் பணி நடைபெற்று வந்தது.
அனுமதி பெறாமல் இடிக்கப்படுவதோடு, இக்கட்டிடத்தின் அருகருகே ஏராளமான அடுக்குமாடி வணிகக் கட்டிடங்கள் இருப்பதாலும், அங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிவதாலும் பாதுகாப்பான முறையில் இடிக்குமாறு, நகராட்சி அலுவலகத்தில் அப்பகுதியினர் புகார் அளித்தனர். எனினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று கட்டிடம் இடிக்கும் பணியில் தொழிலாளர்கள் இன்று ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராமல் கட்டிடம் இடிந்து தகர்ந்தது. இடிபாடிகளுக்குள் சிக்கியவர்களைப் புதுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர்.
சம்பவ இடத்தை மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மேலும், சம்பவம் குறித்து உரிய விசாரணை எடுக்குமாறு நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீஸாருக்கு அறிவுறுத்தினர்.
இதுவரை, வாண்டாக்கோட்டையைச் சேர்ந்த ஆர்.அரங்குளவன் (60), புதுக்கோட்டை திருவப்பூரைச் சேர்ந்த பி.பாண்டியன் (40), கே.மதுரைவீரன் (40), இவரது மகன் சத்தியமூர்த்தி (18), எம்.திருப்பதி (26), ஊனையூர் வி.லெட்சுமணன் (45) உள்ளிட்ட 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT