

திருவள்ளுவர் சிலை திறப்பு மற்றும் திலசை ரத்தினப்பா நூல் வெளியீட்டு விழா திலாசுப்பேட்டை தளிஞ்சை காளியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்றது.
விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
கரோனா தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்பது எங்களின் எண்ணம். அடுத்து வரும் வைரஸ் எந்த ரூபத்தில் வருகிறது என்பது தெரியவில்லை. ஏதோ ஒரு பெயரை சொல்கிறார்கள். மத்திய அரசும் அடிக்கடி வலியுறுத்துகிறது. அரசுக்கு கடிதம் எழுதுகிறது. 'நீங்கள் சிறிய மாநிலம். குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசி போட்டு இருக்கிறீர்கள். நூறு சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக இருக்க வேண்டும்' என்கின்றனர். அது உண்மை. இன்று கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி தடுப்பூசி தான்.
சத்தான சாப்பாடு சாப்பிட்டால் நன்றாக இருப்போம் என நாம் நினைக்கிறோம். ஆனால் அந்த தொற்று எப்படி வருகிறது என்று தெரியவில்லை. கண்ணுக்கு தெரி யாத தொற்றினால் பெரிய அளவில் பாதிப்பு இருந்து கொண்டிருந்தது. ஆனால் தடுப்பூசி வந்த பிறகு அது குறைந்துள்ளது.
புதுச்சேரியில் 75 சதவீதம் வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுகிறோம். நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரியை மாற்ற வேண்டும். அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
நான் தடுப்பூசி செலுத்தாமல், முகக்கவசம் அணியாமலேயே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். வெற்றி பெற்று, முதல்வராகப் பதவியேற்ற மறுநாளே கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்து வமனையில் அனுமதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
நன்கு சாப்பிட்டு, தினமும் விளையாடுவதால் என் உடல் நன்றாக இருப்பதாக நினைத்துக் கொண்டேன். ஆனாலும் எனக்கு கரோனா பரவியது. தற்போது நான் இரு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டேன். எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. கரோனா பரவாமல் தடுக்க நாம் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்த பயம் தேவையில்லை என்றார்.
விழாவில் முன்னாள் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, ரத்தினப்பா நூலாசிரியர் ரத்தின சின்னசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.