

மாணவர்கள், இளைய சமுதாயத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்டங்கள் குறித்த சிறப்புக் கையேடுகள் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் மூலம் வெளியிடப்படும் என, தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மதுரை பைபாஸ் ரோடு துரைசாமி நகரில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்திற்கான புதிய அலுவலகம் ஒன்றை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று திறந்து வைத்தார். தொல்லியல் அறிஞர் சொ. சாந்தலிங்கம் உள்ளிட்ட ஆய்வாளர்களுடன் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயல்பாடுகள் குறித்து விவாதித்தார்.
நிகழ்ச்சியில் பாண்டியநாட்டு ஆய்வுமையத் தலைவர் பி. ராஜேந்திரன், மதுரை அங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டி, தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி, கூடல் கலைக்குழு நிர்வாகி அழகுபாரதி, பசுமை நடை அமைப்பினர் பொறுப்பாளர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் கூறியதாவது:
இந்த ஆய்வு மையம் ஏற்கன வே சிறப்பாக செயல்படுகிறது என்றாலும், பிரத்யேக மாக தமிழ் தொல்லியல் ஆய்வு, பண்பாட்டு தரவுகளை திரட்டும் விதமாக புதிதாக இந்த அலுவலகம் திறக்கப் பட்டுள்ளது.
இதன்மூலம் தொடர்ந்து பல்வேறு தமிழ் ஆய்வுகள் நிகழ்த்தப்படும். தமிழகத்திலுள்ள பல மாவட்டங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய சிறப்பு கையேடுகளும் இம்மையம் மூலம் வெளியிடப்படும். இதன்மூலம் மாணவர்கள், இளைய சமுதாயத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடுகிறோம். மேலும், தமிழ் சார்ந்த பல திட்டங்களை இந்த ஆய்வு மையம் முன்னெடுக்கும் என்றார்.
இதைத்தொடர்ந்து மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பாண்டியநாடு பண்பாட்டு மையம் சார்பில், நடந்த விருது வழங்கும் விழாவில் அமைச்சர் பங்கேற்றார். தொல்லியல் அறிஞர் சொ. சாந்தலிங்கத் திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், அமெரிக்கன் கல்லூரி பசுமைச் சங்க செயலர் ராஜேஷ், காமராசர் பல்கலை உதவி பேராசிரியர் ரவிசங்கர் உள்ளிட் டோருக்கு சாதனையாளர் விருதுகளையும் அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது:
முதல்வர் தொல்லியல் துறை சார்ந்த சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ரூ. 5 கோடியில் ஏற்கெனவே நிகழும் அகழாய்வுகளை தொடர்ந்து நடத்தவும், புதிய இடங்களில் அகழாய்வுகளை மேற்கொள்ள குறிப்பாக, விருதுநகர் மாவட்டம் தும்பக்கோட்டை, நெல்லை காவதம் திலுக்கர் பட்டி போன்ற இடங்களில் அகழாய்வு நடத்தவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு முடிந்து 8-ம் கட்ட அகழாய்வு, கங்கை கொண்ட சோழபுரம் போன்ற மற்ற இடங்களிலும் தமிழக அரசு நிதி ஒதுக்கீட்டில் அகழாய்வு நடத்தப்படும். கல்வெட்டு,தொல்லியல், அருங்காட்சியகத்துறை ஒருங்கிணைத்து சென்னையில் நவீன வசதியுடன் புதிய அருங்காட்சியகம் அமைக்கப் படும். நெல்லை மாவட்டத்தில் பொருநை நாகரீகத்தை காட்சிப்படுத்த ரூ. 15 கோடியில் அருங்காட்சியகப் அமைக்க பணி நடக்கிறது.
கீழடியில் ரூ. 12 கோடியில் கட்டப்படும் அருங்காட்சியகப் பணி விரைவில் முடித்து முதல்வர் திறக்க உள்ளார். தொல்லியல் சின்னங்கள் இருக்கும் இடத்தில் குவாரி பணி நடக்கக்கூடாது. அவற்றை சிதைப்பது மன்னிக்க முடியாத குற்றம் அவற்றை சிதைக்க முற்பட்டால் கடும் தண்டனை அளிக்கப்படும்.
சிறு தொழில்களை மீட்டெடுக்க பல்வேறு சலுகைகளை முதல்வர் அறிவித்துள்ளார். சென்னையில் 6 மாதத்திற்குள் 2 தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். இதன் நன்மை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சேரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாண்டியநாடு பண்பாட்டு மையத் தலைவர் சு.அ.ஜெயலெட்சுமி, மன்னர் கல்லூரிசெயலாளர் மூ.விஜயராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.