

கல்விச் சான்றிதழ்கள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பைத் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பா.குமரய்யா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் 19-06-2017 அன்று சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டபோது இதனைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார் இப்போதைய முதல்வர் ஸ்டாலின். திருப்பூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளிடையே காணொலிக் காட்சி வாயிலாகப் பேசியபோது பொருட்கள் மற்றும் சேவைகள் வரி என்பதற்கு மாற்றுப் பெயர் கொள்ளை வட்டி என்றும் பிரிட்டிஷ் ஆட்சியின்போது விதிக்கப்பட்ட வரியுடன் ஒத்திருப்பதாகவும், 29-11-2020 அன்று தெரிவித்தார்.
ஆனால் இன்றைக்கு அண்ணா பல்கலைக்கழகச் சான்றிதழ்களுக்கான கட்டணத்தின் மீது வரி விதித்திருக்கிறது அரசு. அண்ணா பல்கலைக்கழகத்தின் சேவைகளுக்குப் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி செலுத்தப்பட வேண்டுமென்றும், 2017-ல் பொருட்கள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின், வரிப் பிடித்தம் செய்திருந்தால் அதைத் தாமதமின்றி அபராதத்துடன் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
மேலும் இனியும் தாமதமில்லாமல் மாணவர்களிடமிருந்து வரி வசூலிக்க வேண்டுமென்றும் தமிழக அரசின் வணிக வரித்துறை கடந்த மாதம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அறிவிப்பு ஒன்றினை வழங்கியுள்ளதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகள் வரி நடைமுறைக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது இதுபோன்றதொரு அறிவிப்பினைத் தமிழக அரசின் வணிக வரித்துறை அனுப்பியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இடமாற்றுச் சான்றிதழுக்கான கட்டணம், உண்மைத் தன்மை சரிபார்ப்புச் சான்றிதழுக்கான கட்டணம், மதிப்பெண் பட்டியல், ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல், தற்காலிகப் பட்டச் சான்றிதழ், பட்டச் சான்றிதழ் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்கான கட்டணம், விடைத்தாளின் நகலினைப் பெறுவதற்கான கட்டணம், தொலைந்துபோன சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கான கட்டணம் ஆகியவற்றின் மீது தலா 18 சதவிகித வரி வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கென புதிதாக ஜி.எஸ்.டி. பதிவு எண்ணை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றிருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதன்படி, ஒரு சான்றிதழுக்கு 1,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றால், 180 ரூபாயைப் பொருட்கள் மற்றும் சேவைகள் வரியாக ஒவ்வொரு மாணவ, மாணவியரும் கூடுதலாகச் செலுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. எண்ணைப் பெற்றதிலிருந்து, அண்ணா பல்கலைக்கழகம் இதனை வசூலிக்கத் தயாராகிவிட்டது.
இன்றைக்கு சான்றிதழ் கட்டணத்திற்கு வரி விதிக்கும் அரசு, நாளைக்குத் தேர்வுக் கட்டணம், கல்விக் கட்டணம் போன்றவற்றிற்கு வரி விதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதற்காக பெருந்தலைவர் காமராசர் போன்றோர் ஆற்றிய அரும்பணிகளுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசின் இந்த அறிவிப்பு உள்ளது.
கல்வி ஒன்றும் கடைச்சரக்கல்ல. விற்கவும், வாங்கவும் செய்ய இயலாத ஒன்றுதான் கல்வி. கல்வி வழங்குவது அரசின் அடிப்படை கடமையும் அது தனி மனிதனின் உரிமையும் ஆகும். இதில் அரசு கை வைப்பது தவறு. கல்வி, மருத்துவம் இதற்கு அரசு எந்த வகையில் வரி விதித்தாலும் அது ஏற்புடையதல்ல. எனவே இந்த வரிவிதிப்பை ரத்து செய்ய வேண்டும் என காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக்கொள்கிறது''.
இவ்வாறு குமரய்யா தெரிவித்துள்ளார்.