புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல் சரகத்தில் தொடரும் திருட்டு: பொதுமக்கள் அச்சம்

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல் சரகத்தில் தொடரும் திருட்டு: பொதுமக்கள் அச்சம்
Updated on
2 min read

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு, நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரியில் கொலை, நகை பறிப்பு, வாகன திருட்டு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் சமீகாலமாக அதிகரித்துள்ளது. இதனை தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ரவுடிகளை ஒடுக்க ஆப்ரேஷன் திரிசூல் என்ற பெயரில் அவ்வப்போது ரவுடிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பைக் திருட்டு, கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர வாகன சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக ரெட்டியார்பாளையம் காவல் சரகத்துக்குட்பட்ட இடங்களில் தொடர் திருட்டு, நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இங்கு வசதிப்படைத்தோர், நடுத்தர வகுப்பைச் சேர்ந்தோர் அதிகளவில் வசித்து வருகின்றனர். பள்ளிகள், ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள் என பலதரப்பட்டவையும் இங்குள்ளன. இதன் காரணமாக செழிப்பான பகுதியாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே ரெட்டியார்பாளையம் பகுதியை மர்ம நபர்கள் நோட்டமிட்டு, யாரும் இல்லாத வீடுகளின் பூட்டை உடைத்து திருடுவது, முகவரி கேட்பதுபோல் வந்து நகைபறித்து செல்வது, கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பது, வழிப்பறி போன்ற பல்வேறு சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இம்மாதத்தில் 5-க்கும் மேற்பட்ட திருட்டு, நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. ரெட்டியார்பாளையம் கம்பன் நகரை சேர்ந்தவர் முத்தழகு என்பவரிடம் முகவரி கேட்பது போல் வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் நகையை பறித்தது,

ரெட்டியார்பாளையம் செல்லாபாப்பு நகரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை விண்ணி பிரிசில்லாவின் வீட்டுக்குள் புகுந்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 5 பவுன் நகையை பறித்தது, புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஜெயா நகர் முதலாவது குறுக்குத் தெருவில் வசித்து வரும் புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் வீட்டின் பூட்டை உடைத்து 12.5 பவுன் நகையை திருடிச் சென்றது,

ரெட்டியார்பாளையம் சிவகாமி நகர் 3 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த பால் வியாபாரி கிளமென்ட் (48) என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் பணத்தை திருடியது, ரெட்டியார்பாளையம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கைப்பையை பறித்துச் சென்றது உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த தொடர் திருட்டு, நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உரைந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ‘‘ரெட்டியார்பாளையம் பகுதியில் தொடர்ந்து திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. இது தொடர்பான புகார்களின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. மாறாக ஆங்காங்கே சாலையோரம் நின்று கொண்டு வாகன சோதனை என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பதும், முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் வேலையை செய்து வருகின்றனர். தீவிர ரோந்து மேற்கெள்வதில்லை.

பெயருக்கென்று ரோந்து வருவதோடு, ஏதேனும் குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு செல்போனில் மூழ்கிவிடுகின்றனர். இதனால் திருட்டு கும்பல் எளிதாக வந்து திருடிவிட்டு சென்றுவிடுகின்றனர். எனவே போலீஸார் தீவிர ரோந்து செல்வதோடு, திருட்டு, வழிப்பறி, நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.’’என்றனர்.

போலீஸார் தரப்பில் விசாரித்தபோது, ‘‘ரெட்டியாபாளையம் பெரிய பகுதியாகவும், வளர்ந்து வரும் பகுதியாகவும் இருக்கிறது. திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் தனித்தனி நபர்கள் ஈடுபடுவது தெரியவருகிறது. அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் பிடித்துவிடுவோம். வெள்ளி, சனி, ஞாயிறுகளில் 8 பேர் வரை இரவுப் பணி மேற்கொள்கிறோம்.

வேறு எங்கும் இதுபோல் பார்ப்பதில்லை. ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் 5 உதவி ஆய்வாளர்கள் உட்பட 32 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நீதிமன்ற பணி, காவல் நிலைய ரைட்டர் பணி, ஆய்வாளர் அலுவலகம், வேறு காவல் நிலைய பணி என 8 பேர் வரை சென்றுவிடுகின்றனர். ரெஸ்டில் சிலர் சென்றுவிடுகின்றனர்.

இவைகள் போக மீதமுள்ள சொற்ப காவலர்களை வைத்து ரோந்து செல்வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், கொள்ளை கும்பலை பிடிப்பதில் தொய்வு ஏற்படுகிறது. எனவே, கூடுதல் காவலர்களை நியமித்தால் குற்றங்களை தடுக்க ஏதுவாக இருக்கும்.’’என்று குறிப்பிடுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in