தேர்தலில் கறுப்புப் பணம் புகார் தெரிவிக்க வருமான வரி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

தேர்தலில் கறுப்புப் பணம் புகார் தெரிவிக்க வருமான வரி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலின்போது கறுப்புப் பண புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சென்னை வருமான வரி அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக இலவச தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மண்டல வருமான வரி அலுவலகத்தின் கூடுதல் இயக்குநர் (புல னாய்வு) வி.ராய் ஜோஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறு வதற்காக தேர்தல் ஆணையம் வருமான வரித் துறையின் உதவியை நாடியுள்ளது. குறிப்பாக, தேர்தலின்போது கறுப்புப் பண புழக்கத்தைக் கட்டுப்படுத்த வருமான வரித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கணக்கில் காட்டப் படாத பணம் தேர்தல் செலவுக்காக பயன்படுத்தினால் அவற்றை வருமான வரித் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்வர்.

மேலும், பொதுமக்களும் தங்கள் பகுதியில் யாராவது அதிகளவில் பணம் வைத்திருந்து அவற்றைத் தேர்தலுக்காக செலவழிப்பது அல்லது வாகனம் மூலம் கொண்டு செல்வது குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக வருமான வரித் துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இதற்காக 1800 4256669 என்ற இலவச தொலைபேசி எண்ணுடன் கூடிய 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும், 044-28278799 என்ற ஃபேக்ஸ் எண்ணிலும், itcontrol.chn@gov.in என்ற இ-மெயில் மூலமும் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in