அரசு, மக்களின் கூட்டு அலட்சியம்: புதிதாக உருவான புதுச்சேரி கடற்கரை மணல் பரப்பெங்கும் பரவிக் கிடக்கும் குப்பை

அரசு, மக்களின் கூட்டு அலட்சியம்: புதிதாக உருவான புதுச்சேரி கடற்கரை மணல் பரப்பெங்கும் பரவிக் கிடக்கும் குப்பை
Updated on
1 min read

அரசு, மக்களின் கூட்டு அலட்சியத்தால் புதுச்சேரி கடற்கரையில் புதிதாக உருவான மணல் பரப்பு குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது.

புதுச்சேரி கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுத்து, செயற்கை மணற்பரப்பை உருவாக்க மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து, 25 கோடி ரூபாயில், நவீன தொழில்நுட்பத்தில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது.

புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுக முகத்துவாரத்தில் சேர்ந்துள்ள மணலை அள்ளித் தூர்வாருவதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள மத்திய அரசின் டிரஜ்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் புதுச்சேரி துறைமுகம் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்தது. இப்பணி, ரூ.14.89 கோடி செலவில் நடந்தது. தற்போது புதிய கடற்கரை மணல் பரப்பு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் உருவாகியுள்ளது. மணல் பரப்பு எங்கும் இன்று சென்று பார்த்தால் வெறும் குப்பைகளே காட்சி தருகின்றன.

இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் விசாரித்தபோது, "புதுச்சேரியெங்கும் ஏராளமான கழிவுநீர் வாய்க்கால்கள் நேரடியாகக் கடலுக்குதான் வருகின்றன. அவை பராமரிக்கப்படுவதில்லை. முக்கியமாக கழிவுநீர் சுத்திகரித்து கடலில் விடப்படுவதில்லை. பல இடங்களில் குப்பைகளால் அவை அடைபட்டுக் கிடந்தன. பொதுமக்களும் தங்கள் பங்குக்கு பல வாய்க்கால்களை குப்பைத் தொட்டிகளாக்கினர். தற்போது பெய்த கனமழையால் நகரெங்கும் வெள்ளக்காடானது. அந்த மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள் கடலில் சேர்ந்தன. கடல் எப்போதும் தேவையற்ற குப்பைகளைக் கரைக்குத் தள்ளிவிடும். அதனால் தற்போது கரைக்குத் தள்ளப்பட்ட குப்பைகள் அனைத்தும் தற்போது மணல் பரப்பெங்கும் சிதறிக் கிடக்கின்றன.

முக்கியமாக கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் கடலில் அப்படியே அரசு விட்டு வருகிறது. அது அப்படியே கடலில் கலப்பதும், கடல் மாசு ஏற்படுத்தும் பணியை அரசும், மக்களும் கூட்டாகச் செய்து வருகின்றனர். இதனால் மனிதர்களுக்கு மட்டுமில்லால் கடல் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது புதிய கடற்பரப்பைக் காணவந்த பல சுற்றுலாப் பயணிகளும் விரவிக் கிடந்த குப்பைகளைப் பார்த்து முகம் சுளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in