

டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி வரும் 26-ம் தேதி தமிழகத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தமிழக ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
டெல்லியில் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஓராண்டாக போராடி வருகின்றனர். இதில், முதல் கோரிக்கையான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி தன்னிச்சையாக அறிவித்துள்ளார்.
அதேநேரம், மின்சார சட்டத் திருத்த மசோதா 2020-ஐ திரும்பப் பெற வேண்டும், அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயித்து, அதற்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும் வகையில் தனி சட்டம் இயற்ற வேண்டும் என்ற 2 கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன.
இப்போராட்டக் களத்தில் 700 விவசாயிகளை இழந்துள்ளோம். அவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைக்குக் காரணமான மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளும் நிலுவையில் இருப்பதால் போராட்டத்தைத் தொடர்வதாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவித்துள்ளது.
டெல்லி போராட்டத்தின் ஓராண்டு தினமான நவ.26-ல், தமிழகத்தில் மாவட்ட தலைநகர்களில் தொழிலாளர்களோடு இணைந்து பேரணியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பொதுக்கூட்டமும் நடத்துவது என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில செயற்பாட்டுக் குழு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.