இந்தியா - இலங்கை இடையேயான படகு ஆம்புலன்ஸ் சேவை: இலங்கை தூதருடன் ஆளுநர் தமிழிசை ஆலோசனை

இந்தியா - இலங்கை இடையேயான படகு ஆம்புலன்ஸ் சேவை: இலங்கை தூதருடன் ஆளுநர் தமிழிசை ஆலோசனை
Updated on
1 min read

இந்தியா - இலங்கை இடையேயான படகு அவசர ஊர்தி அறிமுகப்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவுடன், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.

அரசு முறைப் பயணமாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இன்று (நவ. 23) புதுச்சேரி வந்தார். அவர் ஆளுநர் மாளிகையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது அவர்கள் இரு நாடுகளின் சுமுகமான உறவுகள் குறித்து விவாதித்தனர்.

மீனவர்களின் உயிர், உடைமை பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான முறையில் மீனவர்கள் பிரச்சனையை அனுக வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தெரிவித்தார். அதனை ஏற்றுக் கொண்ட அதிகாரி மீனவர்களைப் பாதுகாப்பது அரசின் கடமை என்பதைத் தெரிவித்தார்.

காரைக்கால் மற்றும் இலங்கை இடையேயான படகுப் போக்குவரத்தினை மீண்டும் தொடங்குவது, இந்தியா-இலங்கை இடையேயான படகு அவசர ஊர்தி (Boat-Ambulance) அறிமுகப்படுத்துவது ஆகியவற்றுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது குறித்தும் துணைநிலை ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.

மேலும், தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை அரசு விடுதலை செய்வது குறித்தும் கேட்டறிந்தார். அதில் இரண்டு மீனவர்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக தெரிவதால் அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவை வந்த கோபால் பாக்லே முதல்வர் அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in