Last Updated : 20 Nov, 2021 04:32 PM

 

Published : 20 Nov 2021 04:32 PM
Last Updated : 20 Nov 2021 04:32 PM

நவ.22-ம் தேதி மத்தியக் குழு புதுவைக்கு வருகை: ஆளுநர் தமிழிசை பேட்டி

நவ. 22-ம் தேதி வரும் மத்தியக் குழுவை நானும், முதல்வரும் சந்திக்க இருக்கிறோம் எனப் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் ஆரியபாளையம் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (நவ. 20) சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பெரியவர்கள், சிறுவர்களுக்கு மதிய உணவு பரிமாறினார். தொடர்ந்து தானும் சிறுவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார். அவர்களுடைய படிப்பு, விளையாட்டுகள் குறித்துக் கலந்துரையாடினார்.

சிறுவர்களுக்குப் படிப்பதற்கான புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றையும் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க், துணை ஆட்சியர் ரிஷிதா குப்தா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆரியபாளையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான பாய்-போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது இருக்கும் பாலம் உயரம் குறைவாக இருப்பதால் புதிய பாலம் கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான திட்ட வரைவு தயாராக இருக்கிறது. அபாயகரமான சூழல்களைத் தடுக்கும் வகையில் புதிய பாலம் கட்டப்படும். பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்தியக் குழு மழை பாதிப்புகளை மதிப்பிட நவ.22-ம் தேதி புதுச்சேரி வருகிறது. மத்தியக் குழுவை அழைத்துச் செல்ல மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்திருக்கிறார். நானும், முதல்வரும் அவர்களைச் சந்திக்க இருக்கிறோம்.

சிறிய காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டு இருக்கிறது. கடல்சார் பாதுகாப்பு நிறுவன அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். நிரந்தரத் தீர்வு ஏற்படுத்துவதற்கு முன்னால் உடனடியாகக் கற்கள் மற்றும் மணல் கொட்டி மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மழைக் காலத்தை ஒட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண உதவிகள் குறித்தும் மத்தியக் குழுவின் வருகையின்போது முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்தும் இன்று காலை முதல்வருடன் விவாதித்தேன். கடல் அரிப்பைத் தடுக்க மத்திய அமைச்சருடன் பேசியதையும் பகிர்ந்துகொண்டோம்.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உதவிகள் உடனடியாக கிடைக்க வேண்டும் என்பது குறித்தும் இருவரும் ஆலோசனை செய்தோம். மக்கள் பாதிப்பு அடையாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் வரும் காலத்தில் கடுமையான மழை வந்தாலும் மக்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கான தொலைநோக்குத் திட்டங்களையும் முதல்வருடன் விவாதித்தேன்.

மழையால் பாதிக்கப்பட்ட பல இடங்களை நானும் முதல்வரும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். என்னென்ன உதவிகள் வேண்டும் என்பதையும் கவனித்து வருகிறோம்.’’

இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

சிறுவர்களுடன் உணவருந்திய தமிழிசை

அரசு தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆரியப்பாளையம் மக்களுக்கு உணவு பரிமாறிய ஆளுநர் தமிழிசை, அங்கிருந்த சிறுவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது ஆளுநரின் அருகில் அமர்ந்திருந்த மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க், துணை ஆட்சியர் ரிஷிதா குப்தா ஆகியோருக்கும் உணவு பரிமாறப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x