வேளாண் சட்டங்கள் வாபஸ்; மோடியின் சந்தர்ப்பவாத நடவடிக்கை: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

வேளாண் சட்டங்கள் வாபஸ்; மோடியின் சந்தர்ப்பவாத நடவடிக்கை: கே.எஸ்.அழகிரி விமர்சனம்
Updated on
1 min read

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மோடியின் முடிவில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கே.எஸ்.அழகிரி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:

“விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில், மூன்று வேளாண் சட்டங்களை கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பாஜக நிறைவேற்றியது. இதை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாகக் குரல் கொடுத்தார்கள். விவசாயிகளையோ, விவசாய சங்கங்களையோ கலந்தாலோசிக்காமல் விவசாயிகள் குறித்துச் சட்டம் இயற்றுவதற்கு பாஜகவிற்கு எந்த உரிமையும் இல்லை என்று அகில இந்திய விவசாயிகள் அமைப்பு கடுமையான போராட்டத்தைத் தொடங்கியது.

கடும் குளிர், மழை, வெயில் என்று பாராமல் கடந்த ஓராண்டாக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராடினார்கள். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். போராட்டம் நடத்திய விவசாயிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தக் கூட பிரதமர் மோடி தயாராக இல்லை.

விவசாயிகளின் கோரிக்கையை துச்சமென மதித்த பிரதமர் மோடி திடீரென்று மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதென அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு விவசாயிகளின் நலனில் அக்கறையோடு செய்யப்பட்டதாகக் கருத முடியாது. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியும், 5 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் லக்கிம்பூர் கெரியில் நடைபெற்ற படுகொலையினால் விவசாயிகளிடையே எழுந்த எதிர்ப்பைத் தணிக்கவுமே இந்த முடிவை பிரதமர் மோடி எடுத்திருக்கிறார்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுகிற முடிவு ஒரு சந்தர்ப்பவாத நடவடிக்கையாகும். இதில் அரசியல் உள்நோக்கத்துடன் பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுகிற முடிவை எடுக்கக் காரணமாக இருந்த விவசாய சங்கங்களுக்கும், அவர்களது கோரிக்கையை தேசிய அளவில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த ராகுல் காந்திக்கும் கிடைத்த வெற்றியாகத்தான் கருத வேண்டும்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in